வயதால் மிகவும் மெலிந்து தளர்வடைந்து மக்களின் பார்வையில் படாமல் மறைந்து வாழ்ந்து வரும் தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா வரும் புதனன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடி அதற்காக 27 ஆண்டுகள் சிறை சென்று தென் ஆப்பிரிக்க மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் நெல்சன் மண்டேலா.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றின் விவாத மேடையில் கலந்து கொண்ட அவர், பிறகு பொதுமக்களின் பார்வையில் தென்படாமல் மறைமுகமாகவே வாழ்ந்து வருகிறார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மண்டேலா தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் மட்டுமே கொண்டாடி வருகிறார்.
உடல் நலம் கருதி ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து தனது சொந்த ஊரான கியூனு கிராமத்து வீட்டிலேயே வாழ்ந்து வரும் அவர் இந்த ஆண்டு இருமுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.
இதற்கிடையே நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ஐ உலக மண்டேலா தினம் என்று ஐக்கிய நாட்டு சபை அறிவித்தது. இந்த நாளில் அவரது அறக்கட்டளைகளும், மற்ற பொது நல அமைப்புகளும் அவரது பொதுச்சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
உலகில் மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்ட அவருக்கு டி. கிளார்க்குடன் சேர்ந்து 1993 ம் ஆண்டு நோல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் மண்டேலா பதவியை விட்டு விலகியபோது தொடங்கப்பட்ட நெல்சன் மண்டேலா நினைவிடம், “உங்கள் நேரத்தில் 67 நிமிடங்கள் இந்த தொண்டு நிறுவனத்திற்காக செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்த உலகத்தில் அவர் வாழ்ந்து வருவது தென் ஆப்பிரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே மிகப்பெரும் வாழ்த்தாக அமையும் என்று அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
94 வயதாகும் நெல்சன் மண்டேலா மிக்க நலமுடனும் ஆரோக்கியத்துடனும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவ குழுக்களுடன் சேர்ந்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது பிறந்த நாளன்று 2 கோடி மக்கள் ஒன்றுகூடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்த இருப்பதாகவும் தெரிகிறது.