பிஎன் ஆட்சியில் தண்ணீர் கட்டணம் உயரும்:சேவியர் எச்சரிக்கை

சிலாங்கூரில் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் தண்ணீர் கட்டணம் குறிப்பிடத்தக்க வகையில் உயரலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் என்னதான் சொன்னாலும் பக்காத்தான் ரக்யாட்டின் இலவச நீர் திட்டத்தை பிஎன்னால் தொடர இயலாது என்று சேவியர் குறிப்பிட்டார்.

ஏனென்றால்,  மிகுந்த செலவுபிடிக்கும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதிலும் அண்டை மாநிலமான பகாங்கிலிருந்து நீரைப் பெறுவதிலும்தான் பிஎன் அக்கறை காட்டுகிறது. 

சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரிம8.65பில்லியன் செலவாகும், பாகாங்கிலிருந்து நீரைப் பெறுவதாக இருந்தால் அதற்கு உரிமத் தொகையாக ஆண்டுக்கு ரிம60மில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார் அவர். 

ஆலையைக் கூட்டரசு அரசாங்கம் அமைத்தாலும் அதற்குச் செலவிடப்படும் தொகையைத் திரும்பப் பெறும் பொறுப்பு சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகியவற்றுக்கு நீர் விநியோகிக்கும் சபாஷ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

“லங்காட் 2 ஆலை 2014-இல் கட்டி   முடிக்கப்பட்டதும் தண்ணீர் கட்டணம் 70விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

“தண்ணீர் கட்டணம் உயருமானால், சிலாங்கூர் வீடுகளுக்கு 20கன மீட்டர் நீர் இலவசமாக வழங்கப்படுவது அர்த்தமில்லாமல் போகும்”, என்று நேற்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் சேவியர் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசு தீவகற்ப மலேசியாவில் உள்ள நீர் ஆதாரச் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைக்க முயல்கிறது.இம்முயற்சியால் தண்ணீர் கட்டணம் உயரும் என்பதால் சிலாங்கூர் அதை எதிர்க்கிறது.

சபாஷுக்கு ஆதாயத்தில்தான் குறி

மேலும், சபாஷ் அதன் சொத்துக்களைக் கூட்டரசு அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்குமுன் அதை மாநில அரசாங்கத்திடம் விற்க வேண்டும் என்றும் சிலாங்கூர் பிடிவாதம் பிடிக்கிறது.

ஆனால்,அம்னோவுடன் தொடர்புகொண்டுள்ள சபாஷ் தலைவர் சிலாங்கூரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

சபாஷ் ஒரு நிறுவனம் என்பதால் ஆதாயம்தான் அதன் குறிக்கோளாக இருக்கும் எனவே, தண்ணீர் கட்டணத்தைக் குறைவாக வைத்துக்கொள்ள அது உதவப்போவதில்லை என்று சேவியர் எச்சரித்தார்.

அத்துடன் சபாஷ் நிறைய கடன்பட்டிருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த உண்மை நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால், நோவாவின் பேச்சு வெறும் பேச்சு என்பது தெளிவு.மக்களின் கண்ணை மறைக்க அரசியல் இனிப்பூட்டுகிறார் அவர்”.

சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தாமதமானால்  கோலாலம்பூர், ஹுலு லங்காட், கிள்ளான் பகுதிகளில் நீர் பங்கீட்டு முறை அமலுக்கு வரலாம் என வார இறுதியில் சபாஷ் எச்சரித்திருந்தது.

ஆனால், சேவியர், தண்ணீர் நெருக்கடி என்று கூறப்படுவதை ஒதுக்கித்தள்ளினார்.சிலாங்கூரில் ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்பதாக அவர் சொன்னார்.

 

 

TAGS: