மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்குபெற்றவர்களில் இருவரில் ஒருவர் குற்றச்செயலுக்குப் பலியாகி இருக்கிறார் அல்லது குற்றச்செயலுக்குப் பலியானவர்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்.
கோலாலம்பூரில் பங்சார் வட்டாரத்தில் 20 பேரிடம் அந்த ஆய்வு செய்யப்பட்டது.அவர்களில் 11பேர் தங்களுக்குத் தெரிந்தவர்கள் குற்றச்செயலுக்குப் பலியாகி இருப்பதாகக் கூறினர்.
அவர்களில் பலர், கடந்த ஈராண்டுகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் வழிப்பறிக் கொள்ளைக்குப் பலியானவர்கள் அல்லது அதற்குப் பலியானவர்களை அறிந்து வைத்திருப்பவர்கள்.
ஆனால், நேர்காணல் காணப்பட்டவர்களில் ஐந்தில் ஒருவர்தான் குற்றச்செயலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்.
27-வயதுடைய ஈவோன் என்பவர் ஈராண்டுகளுக்குமுன் ஏற்பட்ட சம்பவத்தை இன்னும் மறக்கவில்லை.
கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கைப்பை எடுத்துச் செல்லப்பட்டது
“வேலைக்குச் செல்லும்போது(கோலாலம்பூர், ஓவர்சீஸ் யூனியன் கார்டன் அருகில்) போக்குவரத்து விளக்கில் காரை நிறுத்தினேன்.ஒரு மோட்டார் சைக்கிளோட்டி கார் கண்ணாடியை உடைத்தான்”, என்றாரவர்.அச்சம்பவத்தில் அவரின் கைப்பை பறிபோனது.
பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போலவே அவரும் போலீசில் புகார் செய்தார்.அவர்கள் பெரிதாக எதுவும் செய்ததாக தெரியவில்லை.ஒரே ஒருமுறை மட்டும் அவரைத் தொடர்புகொண்டு பேசினார்கள்.
நல்ல வேளையாக, ஒரு நல்லவர் அவரது கைப்பையைக் கண்டெடுத்து அவரிடம் சேர்ப்பித்தார்.அதிலிருந்த பணம்காசைக் காணவில்லை.ஆனால், மைகார்ட்டும் மற்ற ஆவணங்களும் பத்திரமாக இருந்தன.
ரோஸலினா,23,அவருக்குத் தெரிந்த ஒருவரின் கார் ஜாலான் சீபூத்தே அருகில் திருடுபோனதாகக் கூறினார்.
“மூன்று நான்கு மாதங்களுக்குமுன் நடந்தது.இன்னும் அது கிடைக்கவில்லை.அவர் காப்புறுதிப் பணத்துக்காகக் காத்திருக்கிறார்”, என்றாரவர்.
ஜுராஸுவான்,28,தம் நண்பர் கார் நிறுத்தத்தில், வேலை செய்யும் இடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது வழிப்பறிக்கு ஆளானார் என்றார்.
“அச்சம்பவத்தில் ஒரு விமானியான என் நண்பர் பணப்பையையும் விமானமோட்டும் உரிமத்தையும் பறிகொடுத்தார்”, என்றாரவர்.