மகாதிர்: “என்ன செய்தேன்,ஏன் சர்வாதிகாரி என்கிறீர்கள்?”

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்,  தம்மை ஒரு கொடூர சர்வாதிகாரி என்று கூறுவோர் அதை நிரூபிக்க வேண்டும் என்று தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒரு சர்வாதிகாரியாக அப்படி நான் என்னதான் செய்துவிட்டேன்?”, என்றவர் வினவினார்.

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட அந்த முத்திரை, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ காலம்பூராவும் ஒட்டிக்கொண்டிருக்கும் என்றாரவர்.

“இப்படியொரு முத்திரையைக் குத்திய பின்னர் எதிரிகள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டார்கள்”.

தம் அரசியல் வாழ்க்கையில் தாம் பல பெயரிட்டு அழைக்கப்பட்டிருப்பதாக மகாதிர் கூறினார். அவற்றில் அடிக்கடி கூறப்படும் பெயர்கள் ‘மஹாஸலிம் (மிகக் கொடூரமானவர்)’, ‘ஃபிரான்(பாரோ மன்னர்), சாதாரணமாக அடிக்கடி சொல்லப்படும் பெயர் ‘சர்வாதிகாரி’.

“இப்போதெல்லாம் என் எதிரியாக இல்லாத ஒருவர் என்னை நேர்காணல் செய்வதாக இருந்தால்கூட ஒரு சர்வாதிகாரியாக என்மீது குத்தப்பட்ட முத்திரையை நம்பியவர்போலத்தான்  கேள்விகள் கேட்கிறார்”.

சர்வாதிகாரிகள் என்ற பெயருக்குப் பொருத்தமான சிலரை வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டிய மகாதிர், “சர்வாதிகாரிகள்” என்போரின் ஆட்சியைப் போன்று தம் ஆட்சி இரத்தம் தோய்ந்ததாகவோ கொடூரமானதாகவோ இருந்ததில்லை என்றார்.

முபாராக் ஒரு “சர்வாதிகாரி” என்று குறிப்பிட்ட மகாதிர், அவர் எகிப்திய அதிபராக இருந்தபோது முஸ்லிம் சகோதரத்துவ இயக்க உறுப்பினர்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தார், யுஎஸ் $70 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்தார், தேர்தல்களில் வெற்றிபெற பல தில்லுமுல்லுகளைச் செய்தார்.

“முபாராக் ஆட்சிக்காலத்தில் ஒரு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அதிபரின் மாளிகையிலிருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்லும் சாலைகள் அதிபரின் வாகனத் தொகுதி செல்வதற்காக காலி செய்யப்பட்டிருந்தன. சாலைகளின் இரு மருங்கிலும் ஆயுதம் தாங்கிய இராணுவ வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.

ஆங்காங்கே குறிபார்த்து சுடுவோர்

“கட்டிடங்களின் கூரைப்பகுதிகளில் குறிபார்த்து சுடுவோர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அதிபரின் வாகனத்தொகுதியைத் தாக்குவோர் என்று யார்மீதாவது சந்தேகம் வந்துவிட்டால் போதும் சுட்டுத்தள்ளி விடுவார்கள்”.

முபாராக்கின் மாளிகையைச் சுற்றிலும் உயர்ந்த மதில்கள், அவற்றில் எந்த நேரமும் ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் என்றவர் வருணித்தார். அதிபரின் எதிரிகள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கைது செய்யப்படுவார்கள், விசாரணையின்றிக் காவலில் வைக்கப்படுவர். பிறகு காணாமல் போய்விடுவர்.

“பேச்சுரிமை இல்லை.பத்திரிகைச் சுதந்திரம் இல்லை. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் இல்லை. முபாராக் நினைத்தால் எவரையும் அமைச்சராக நியமனம் செய்வார்.அதேபோல் பிடிக்காதவர்களை எந்த நேரத்திலும் பணிநீக்கமும் செய்வார்”.

உலகில் சர்வாதிகாரிகள் பலர் இருந்துள்ளனர் என்று கூறிய மகாதிர், ஆறு மில்லியன் யூதர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்த ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி, பெர்டினண்ட மார்கோஸ், ரூமேனியன் அதிபர் நிக்கோலே சிசெஸ்கியு, லிபியாவின் முவாம்மார் கடாபி, ஈராக்கின் சதாம் உசேன் ஆகியோர் அவர்களில் சிலர் என்றார்.

TAGS: