முடிவை மறுபரிசீலினை செய்யுமாறு லத்தீபாவுக்கு பிகேஆர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை லத்தீபா கோயா மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

லத்தீபாவுக்கு அதன் தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்படும் என சேவியர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“நாங்கள் அந்த விஷயத்தை ஆய்வு செய்தோம். லத்தீபாவுடன் தொடர்பு கொள்ளுமாறு தலைமைத்துவ மன்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த மாநகராட்சி மன்றத்தில் அவர் பிகேஆர் பேராளர் ஆவார்.

“அது தலைமைத்துவ மன்றத்தின் பொறுப்பாகும். தமது பதவி துறப்பு முடிவை மீட்டுக் கொள்ளுமாறு சிலாங்கூர் பிகேஆர் கேட்டுக் கொள்ளும்,” என அவர் சொன்னார்.

பிகேஆர் அரசியல் பிரிவு உறுப்பினருமான லத்தீபா கடந்த திங்கட்கிழமையன்று பெட்டாலிங் ஜெயா  நகராட்சி மன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

நகாராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் நீக்கப்படக் கூடும் என்ற “ஊகங்கள் பரவி பொது மக்களுக்குத் தெரிந்து விட்டதால்” தாம் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என லத்தீபா தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஏழைகளுக்கான வீடமைப்புத் திட்டங்கள் மீது லத்தீபா தனிப்பட்ட மந்திரி புசார் காலித் இப்ராஹிமிடம் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் அவரை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கக் கூடும் என்ற வதந்திகள் பரவத் தொடங்கிய பின்னர் அவர் பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பித்தார்.

 

TAGS: