அன்வார் vs உத்துசான் வழக்கில் நீதிபதி சிங்கம் எரிச்சலடைந்தார்

இன்று (18.07.2012) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு  எதிராக அன்வார் இப்ராகிம் தொடுத்திருந்த அவதூறு வழக்கு விசாரணையின்போது உத்துசானின் வழக்குரைஞர் அவரது குறுக்குவிசாரணையில் அதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டதால் உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி. சிங்கம் எரிச்சலடைந்தார்.

“நீர் உமது வழக்கை அழிக்கிறீரா அல்லது அதற்கு உதவுகிறீரா, எனக்குத் தெரியாது”, என்று நீதிபதி குறைபட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக உத்துசானின் வழக்குரைஞர் பிரோஸ் அனைத்துலக ஒலிபரப்பு நிலையமான பிபிசிக்கு அன்வார் அளித்த நேர்காணலில்  ஓரினப்புணர்ச்சி பற்றி அவர் கூறியிருந்த கருத்து குறித்து அவரிடம் கேள்விகளைத் தொடுத்தார்.

அன்வார் அவரின் பதிலில் மீண்டும் மீண்டும் தாம் இவ்விவகாரம் குறித்து எதுவும் கூறவில்லை ஏனென்றால் பிபிசியின் பேட்டியாளர் தம்மிடம் அது குறித்து எதுவும் கேட்கவில்லை என்றார்.

இது போன்ற கேள்வியை பிரோஸ் மீண்டும் மீண்டும் அன்வாரிடம் கேட்டதால் சினமுற்ற நீதிபதி சிங்கம், ” ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அறிக்கையில் இவை பற்றியதெல்லாம் இருக்கின்றன. நான் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறேன்? நான் பதிவு செய்யும் இயந்திரமல்ல. இவற்றை உமது வாதத்தொகுப்பில் செய்யும்”, என்று நீதிபதி பின்னர் கூறினார்.

பெரும்பான்மை முஸ்லிம்களைக்கொண்ட ஒரு நாட்டில் ஓரினப்புணர்ச்சிக்கு அன்வார் ஊக்கம் அளிக்கிறார் என்று உத்துசான் மலேசியா வெளியிட்டிருந்த செய்திக்கு எதிராக ரிம150 மில்லியன் இழப்பீடு கோரி உத்துசான் மீது அன்வார் தொடுத்திருந்த வழக்கின் முதல் நாள் விசாரணை இன்று நடந்தது.

வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 13 இல் தொடங்கும்.