சிரியா அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்

சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ்ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.

அஸ்ஸிஃப் ஷெளக்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர்.

தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் தாவூத் ராஜீஹாவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

சிரியாவின் புலனாய்வுத்துறைத் தலைவர் ஹிஷாம் இக்திகர், உள்துறை அமைச்சர் மொஹமட் இப்ராஹீம் அல்-ஷார் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர்.

மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்துகொண்ட கூட்டமொன்றை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராவ்தா மாவட்டத்திலுள்ள இந்தக் கட்டடத்தைச் சூழவுள்ள பகுதிகள் வெளித்தொடர்புகள் இன்றி மூடப்பட்டுள்ளன.

டமஸ்கஸ்ஸில் தாக்குதல்கள் தீவிரமடைந்துவருகின்ற சூழ்நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.