தேர்தல் நடைமுறைகள் குறிப்பாக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் தேர்வும் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளும் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவு செய்துள்ள நான்கு அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “கட்சி சார்பற்ற தேர்தல் கண்காணிப்பு நடைமுறைகளுக்கான அனைத்துலகக் கோட்பாட்டுப் பிரகடனத்தையும் உள்நாட்டுப் பார்வையாளர்களுக்கான OSCE/ODIHR கையேட்டையும் அமலாக்குமாறும் அவை இசி-க்கு ஆலோசனை கூறின.
“இசி தலைவர் அப்துல் அஜிஸை நாங்கள் சந்தித்த போது பார்வையாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடைமுறைகளிலும் அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளிலும் அந்த அனைத்துலகத் தரங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம்,” என அவை தெரிவித்தன.
“குழு என்ற முறையில் நாங்கள் எங்கள் வேண்டுகோளுக்கு இசி-யின் பதில்களை எதிர்பார்க்கிறோம். 13வது பொதுத் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய நாங்கள் இசி-யுடனும் சிவில் சமூகத்தில் உள்ள எங்கள் அனைத்து நண்பர்களுடனும் அணுக்கமாக ஒத்துழைக்க ஆவலாக இருக்கிறோம்.”
Ideas என்ற ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம், சுயேச்சையான கருத்துக் கணிப்பு மய்யமான மெர்தேக்கா மய்யம், Asli என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம், TI-M என்ற அனைத்துலக மலேசிய வெளிப்படைக் கழகம், Proham என்ற மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கம் ஆகியவையே இசி தேர்தல் பார்வையாளர்கள் என அறிவித்த ஐந்து அமைப்புக்களாகும்.
அந்த ஐந்தில் Proham தன்னிடம் அனுபவமும் நிபுணத்துவமும் வளங்களும் இல்லை எனக் கூறி மறுத்து விட்டது.
ஏற்கனவே இசி விடுத்த அழைப்பை NIEI என்ற ஜனநாயக தேர்தல் நேர்மைக் கழகம் பார்வையாளர்களுக்கான பணி நடைமுறைகள் இல்லாததால் நிராகரித்து விட்டது.