ஷபாஸை சிலாங்கூர் எடுத்துக்கொள்வதை ஆதரித்து பிகேஆர் பேரணி

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்கள், மாநிலத்துக்குக் குடிநீர் வழங்க குத்தகை பெற்றுள்ள ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(ஷபாஸ்) நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி மந்திரி புசாரை வலியுறுத்த திங்கள்கிழமை பேரணி ஒன்றை நடத்துவர்.

“ஷபாஸ், நல்ல முறையில்(நீர் ஆதாரங்களை)நிர்வகிக்கவில்லை, சிலாங்கூர் மக்களுக்கும் நல்ல சேவையை வழங்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

“இதன் தொடர்பில் ஷபாஸின் நீர்ப்பங்கீட்டு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஷபாஸின் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி மாநில அரசை வலியுறுத்தியும் பிகேஆர் இளைஞர்கள் மகஜர் ஒன்றைக் கொடுப்பார்கள்”, என்று சிலாங்கூர் பிகேஆர்  இளைஞர் தலைவர் அஸ்மிஸாம் சமான் ஹுரி கூறினார்.

ஷபாஸ் அதன் நடவடிக்கைகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மக்களுக்கு அதுவும் புனித ரமலான் மாதத்தில் தொல்லைகள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று நெருக்குதல் கொடுப்பதுதான் தங்களின் நோக்கம் என்று அஸ்மிஸாம் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிட்டிருந்தார்.

ஷா ஆலம் செக்‌ஷன் 13-இல் விஸ்மா ரோஸாலிக்கு வெளியில் திங்கள்கிழமை நண்பகல் 12மணிக்கு நடைபெறும்  ஷபாஸுக்கு எதிரான கண்டனக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர் சிலாங்கூர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விஸ்மா ரோஸாலியில்தான் ஷபாஸின் தாய் நிறுவனமான புஞ்சாக் நியாகா புஞ்சாக் நியாக ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தலைமையகம் உள்ளது.அதன் செயல்முறை தலைவர் ரோஸாலி இஸ்மாயில்.

TAGS: