பெர்சே வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள பாக் சமட்டும் வேறு ஐவரும் கோரிக்கை

தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டும் பெர்சே 2.0 இயக்கக்குழுவைச் சேர்ந்த மேலும் ஐவரும், தங்கள் சகாக்கள் 10 பேருக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுச் செய்திருக்கிறார்கள்.

அந்த ஐவர், இயோ போ, ஹிஷாமுடின் முகம்மட் ரயிஸ், அஹ்மட் ஷுக்ரி ச்சே ரஸாப், சுப்ரமணியம் பிள்ளை, லியாவ் கொக் பா ஆகியோராவர்.

பெர்சே 3.0 பேரணியின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு ரிம122,000 இழப்பீடு கேட்டு கூட்டரசு அரசாங்கம் மே 15-இல், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கும் ஒன்பது இயக்கக்குழு உறுப்பினர்களுக்கும் எதிராக வழக்கு தொடுத்தது.

பெர்சே-இன் மற்றொரு இணைத் தலைவர் சமட். ஆனால், அவருடைய பெயர் அதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

ஏப்ரல் 28-ல், அம்மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்ததில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் தங்களையும் எதிர்வாதிகளாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சமட்டும் மற்ற ஐவரும் விரும்புகின்றனர்.

கூட்டரசு அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் அம்பிகாவுடன், வலைப்பதிவரும் சமூக ஆர்வலருமான ஹரிஸ் பாதில்லா,மரியா சின் அப்துல்லா, சைட் கமருடின், கே.ஆறுமுகம், எஸ்.அருள்பிரகாஷ்,வொங் சின் ஹுவாட், டாக்டர் அஹ்மட் பாரூக் மூசா, தோ கின் வூன், எண்ட்ரு கூ ஆகியோர் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவ்வழக்கு புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள அமைதிப் பேரணி சட்டம் 2012(பிஏஏ)இன்கீழ் போடப்பட்டுள்ளது.

அம்பிகா, கடந்த மாதம் தொடுத்த எதிர்-வழக்கில் பிஏஏ பேச்சுரிமைக்கும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் தடையாகவுள்ளது என்பதால் அதை அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சட்டத்தின் பகுதி 6(2)(ஜி)-இல் இழப்பீடு கோரி அரசாங்கம் வழக்கு தொடுக்கலாம் என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுயமாகவே வந்து கலந்துகொண்டார்கள்.அவர்கள் செயல்களுக்கு பெர்சேயோ அவரோ பொறுப்பேற்க முடியாது என்றாரவர்.