பணிஓய்வு வயது நீட்டிக்கப்பட்டது இபிஎப் பணத்தைப் பிடித்துவைத்துக்கொள்வதற்கு அல்ல

ஊழியர் சேமிப்பு நிதி (இபிஎப்) யில் உள்ள பணத்தைக் கூடுதல் காலத்துக்கு வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான் அரசாங்கம் பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு நீட்டிக்கிறது என்று கூறப்படுவதை மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நிராகரிக்கிறார்.

இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பணிஓய்வு வயது நீட்டிக்கப்பட்டாலும்  இபிஎப் பணத்தை 55வயதில் மீட்டுக்கொள்ளலாம், அதில் மாற்றமில்லை என்றார்.

“60 வயதுவரை பணத்தை இபிஎப்-பில் வைத்து (அரசாங்கத்துக்கு) உதவ வேண்டுமே என்ற கவலை தேவையில்லை”, என்றாரவர்.

இபிஎப் பணமீட்பு வயதில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் போதுமான ஆலோசனைக் கலப்புக்குப் பின்னரே செய்யப்படும் என்றாரவர்.

“இப்போது அதில் இபிஎப் மாற்றங்களைச் செய்யாது.(பணமீட்பு வயதை உயர்த்த நினைத்தால்) சம்பந்தப்பட்டவர்களுடன் போதுமான அளவுக்கு ஆலோசனை கலக்கப்படும்”.

அதிகாரப்பூர்வமான கொள்கை அமலுக்கு வருமுன்னர் பணிஓய்வு வயதை 60க்கு நீட்டிக்க நினைக்கும் நிறுவனங்கள் தாராளமாக அதைச் செய்யலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

“பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் இன்றே அதை அமலாக்க முடியாதா என்று (குறுஞ்செய்திவழி) வினவுகிறார்கள்.அது அவ்வளவு எளிதல்ல”.

அதன் தொடர்பில் அமைச்சுடன் நடத்தப்பட்ட கூட்டங்களில் முதலாளிகளின் எதிர்வினைகள் பலவகைப்பட்டிருந்தன.சிலர் ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரை அவகாசம் கேட்டிருந்தனர்.

“கருத்துகள் மாறுபடுகின்றன.எல்லாருக்கும் நியாயமான ஒரு முடிவைத்தான் செய்வோம்”, என்று சுப்ரமணியம் கூறினார்.

குறைந்தபட்ச பணிஓய்வு வயதை 60-க்கு நீட்டிக்கும் சட்ட முன்வரைவு கடந்த வாரம் மேலவையின் ஒப்புதலைப் பெற்றது.

 

TAGS: