கடந்து ஆண்டு ஜூலை 1 இல் பெர்சே (தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்கள் கூட்டணி) ஒரு “சட்டவிரோதமான” அமைப்பு என்று உள்துறை அமைச்சர் செய்திருந்த அறிவிப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
ஆனால், அக்கூட்டணியைப் பதிவு செய்யவதற்கான ஆணை கோரி பெர்சே செய்திருந்த இதர இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றம் வழங்கவில்லை.
அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக பெர்சே தொடுத்திருந்த வழக்கில் அது தனது வழக்கை வெற்றிகரமாக நிருபித்துள்ளது என்று நீதிபதி ரோஹானா யுசுப் இன்று காலையில் வழங்கிய தீர்ப்பில் கூறினார்.
மேலும், உள்துறை அமைச்சரின் அறிவிப்பு “கரைபடிந்தது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
“ஆகவே, வாதியின் மனுவை (அரசாங்கத்தின் அறிவிப்பை மறுஆய்வு செய்வதற்கான மனு) அனுமதிக்கிறோம். செலவுத் தொகை வழங்கப்படவில்லை”, என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மேற்கொண்டு நடவடிக்கைக்கான உத்தரவுக்காக சட்டத்துறை தலைவருக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று பிரதிவாதிகளின் தரப்பில் அரசு தரப்பு வழக்குரைஞர் அஸிசான் முகமட் அர்ஷாட் கூறினார்.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெர்சே ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு என்பதாகிறது என்று பெர்சேயின் வழக்குரைஞர் கே.சண்முகா கூறினார்.
“…உள்துறை அமைச்சரின் முடிவு அறிவுப்பூர்வமானதல்ல, ஏனென்றால் அதனை நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலானது என்று அறிவித்தப் பின்னர், அவரும் இதர அதிகாரிகளும் பெர்சே தலைவர்களைச் சந்தித்துள்ளனர்”, என்று சண்முகா கூறினார்.
இக்கூட்டணியை சட்டவிரோதமானது என்று அறிவித்தது தேவையற்றது என்றார் பெர்சேயின் இணைத் தலைவரான அ.சமாட் சயிட்.
“இந்த வழக்கு நடவடிக்கை நேரம், சக்தி மற்றும் அரசாங்க நிதியை வீணடித்துள்ளது. இந்நடவடிக்கை மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தையும் உருவாக்கியது”, என்று அவர் நீதிமன்றத்திற்கு வெளியில் கூறினர்.
“அரசாங்கம் பெர்சேயை “கெட்டது” என்று முத்திரை குத்தியது. கடந்த வாரம் பிரதமரும் இதர அதிகாரிகளும் பெர்சேயால் சவூதி அரேபியா அரசாங்கம் நிர்ணயித்திருந்த ஹாஜ் யாத்திரை பங்கேற்பு அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.”
“அதிகாரிகளின் நடவடிக்கைகளில் காணப்பட்ட முரண்பாடுகளை நீதிபதி ரோஹானா ஜூன் 26 இல் நடந்த விசாரணையின் போது சுட்டிக் காட்டினார் என்பதை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
அம்பிகாவின் தலைமையிலான 14 உறுப்பினர்களைக் கொண்ட பெர்சேயின் வழிகாட்டிக்குழு உள்துறை அமைச்சர், போலீஸ் படையின் தலைவர் மற்றும் அரசாங்கம் ஆகியோரை பிரதிவாதிகளாக வழக்கில் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கில் அம்பிகாவுடன் இதர வாதிகள்: டாக்டர் அஹமட் பாருக் மூசா, எஸ். அருள் பிரகாஷ், கே. ஆறுமுகம், ஹாரிஸ் பாதில்லா முகமட் இப்ராகிம், அண்ட்ரூ கூ சின் ஹோக், லியா கோ பா, மரியா சின் அப்துல்லா, எஸ்பி. சுப்ரமணியம், தோ கின் வூன், வோங் சின் ஹுவாட், இயோ யாங் போ, இயோ யோங் வோய் மற்றும் ஸைட் கமாருடின்.