தேர்தல் ஆணையம் ஊராட்சி மன்றங்களைச் சந்திக்கிறது ஆனால் திடீர்த் தேர்தலை மறுக்கிறது

விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணைய கண்காணிப்புக் குழுக்களில் அங்கம் பெறுவதற்காக ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஆயத்தம் செய்யப்படுவதாகக் கூறப்படுவதை ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

“தேர்தல் செயலகத்தின் சாதாரணக் கூட்டம்தான் அது. அதில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலிருந்தும் இருவர் அழைக்கப்பட்டனர். நாங்கள் செப்டம்பர் 14ம் தேதி டி பால்மா ஹோட்டலில் சந்தித்தோம்”, என சுபாங் ஜெயா நகராட்சி மன்ற அனுமதி, அமலாக்கப் பிரிவு இயக்குநர் சுல்குர்னாய்ன் சே அலி மலேசியாகினியிடம் கூறினார்.

அவர் சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டம் நடந்ததை உறுதி செய்த அவர், தேர்தல் ஆணையத்துடன் அங்கு விவாதிக்கப்படவில்லை என்றார்.

தேர்தல் கண்காணிப்புக்காக அமலாக்கக் குழுக்களைத் தயார் செய்வது குறித்து தேர்தல் செயலக துணைச் செயலாளருக்கும் ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் இடையில் நிகழ்ந்த அந்தச் சந்திப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்டால் மட்டுமே தேர்தல் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் பணியில் ஈடுபடுத்தவும் முடியும் என சுல்குர்னாய்ன் விளக்கினார்.

“வழக்கமான விவகாரங்கள் மீது அந்தக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. சிறிய பயிற்சி என்று கூடச் சொல்லலாம்”, என அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைய கண்காணிப்புக் குழுக்களாக ஊராட்சி மன்ற அதிகாரிகளை பயன்படுத்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாக என்ற கேள்விக்குப் பதில் அளித்த போது சுல்குர்னாய்ன் அவ்வாறு கூறினார்.

“வழக்கமான விவகாரங்கள்” என்று கூறியதைத் தவிர அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட மற்ற விஷயங்கள் குறித்து விவரம் தர அவர் மறுத்து விட்டார்.

தேர்தல்கள் வரலாம்

ஊராட்சி மன்றங்களின் மூத்த நிர்வாகிகளுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு நிகழ்ந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறின. ஊராட்சி மன்ற அதிகாரிகளை தேர்தல் அமலாக்க குழுக்களில் அங்கம் பெறச் செய்வது அந்தச் சந்திப்பின் நோக்கம் எனக் கூறப்பட்டது.

பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் தேர்தல் ஆணையம் பலரை தேர்தல் அதிகாரிகளாக  நியமித்துள்ளது என்றும் பல தரப்புக்கள் கூறிக் கொண்டுள்ளன.

தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கப்படும் தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு பல நகராட்சி மன்றத் தலைவர்களும் மேயர்களும் அழைக்கப்பட்டுள்ளதால் பல ஊராட்சி மன்றங்கள் தங்கள் கூட்டங்களைத் தள்ளி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் திடீர் பொதுத் தேர்தல் நவம்பர் மாதத்தில் கூட நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் வலுவடைந்தன.

அந்த விவகாரத்தை உறுதி செய்வதற்கு மேயர்கள், நகராட்சி மன்ற, ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

தேர்தல் ஆணையத்துடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சந்திப்பு பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என தொடர்பு கொள்ளப்பட்ட போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

என்றாலும் ஊராட்சி மன்ற உயர் அதிகாரிகள் அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்றக் கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

TAGS: