பக்காத்தான் கார் விலைகளைக் குறைக்க உறுதி கூறுகிறது

பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் வாக்குறுதிகளில் காருக்கான கலால் வரிகள் அகற்றப்படும் என்பதும் உள்ளிட்டிருக்கும்.அதன்வழி குடும்பங்களின் கடன்களைக் குறைத்து வருமானத்தைப் பெருக்குவது அதன் நோக்கமாகும்.

நாட்டில் 72விழுக்காட்டு குடும்பங்கள் கார்கள் வைத்திருக்கின்றன.கார்களுக்காக அவற்றின் உண்மையான மதிப்பைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு தொகையை கலால் வரிகளாக அவை செலுத்துகின்றன என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி(இடம்).

வரிகளைக் குறைப்பது குடும்பங்களின் வருமானத்தைக் கூட்டுவதற்கான எளிய வழிமுறையாகும் என்றாரவர்.

செலவைக் குறைத்தால் வருமானம் தானே உயரும் என்பதை எந்தப் பொருளாதார நிபுணரைக் கேட்டாலும் சொல்வார் என ரபிஸி செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

இவ்விவகாரம் பற்றி பிகேஆர் மற்றும் பக்காத்தான் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது பற்றிய விவரங்கள் உயர் தலைமைத்துவத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

கார் கடன்தொகை 18மாதங்களில் ரிம16பில்லியன் அல்லது 14விழுக்காடு உயர்ந்து 2010-இல் ரிம118பில்லியனாக இருந்தது.இதற்கு 2006-இல் தொடக்கப்பட்ட தேசிய வாகனக் கொள்கைதான் காரணம் என்றாரவர்.

“அம்னோ, பிஎன்னின் வாகனக் கொள்கையால் காரின் விலைகள் வானத்துக்கு எகிறி மக்களுக்குப் பெரும் சுமையாக விளங்குகின்றன”.

இப்போதைக்கு பெரோடுவா கஞ்சில் போன்ற 1,500cc கார்களுக்கு மிகக் குறைந்த வரி, 70விழுக்காடு விதிக்கப்படுகிறது.இதில் 60விழுக்காடு கலால் வரி,10விழுக்காடு விற்பனை வரி.

இறக்குமதி செய்யப்பட்ட காராக இருந்தால் 30விழுக்காடு இறக்குமதி வரியும் சேர்ந்து வரி 100விழுக்காடாக உயரும்.

“ ஆக, நீங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிம40,000 காரை வாங்கினால் வரியாக ரிம16,000 கொடுக்கிறீர்கள்”, என்று ரபிஸி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கடுமையான வரிகளைச் செலுத்த மக்கள் கடன்வாங்குவதைக் குறைப்பதுதான் பக்காத்தானின் நோக்கம் என்றாரவர்.

“இப்போதே குடும்பங்களின் கடன், நாட்டின் கடனைவிட இருமடங்காக, ரிம800பில்லியனாக உள்ளது”.

கலால் வரியை எடுத்துவிட்டால் அரசாங்கத்துக்கு ரிம8பில்லியன் இழப்பு ஏற்படும் என்பது பக்காத்தானின் கணிப்பு.ஆனால், இதை வேறு வழிகளில் சரிக்கட்டி விடலாம்.

“நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் (அதைச் சரிக்கட்ட)வேறு முறைகளைக் கையாளலாம்.அத்தியாவசிய பொருளான கார் போன்றவற்றுக்கு வரி விதித்து மக்களைத் தண்டிக்கக்கூடாது”.

மாணவர்களுக்கான பிடிபிடிஎன் கடன் ஒழிப்புக்குக் கொடுக்கப்பட்டது போன்ற முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட்டு பக்காத்தான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளப்படும்.

இதன் தொடர்பில் விளக்கக் கூட்டங்கள் ஆகஸ்ட் 5தொடங்கி நடத்தப்படும் என்று கூறிய ரபிஸி பொதுமக்களிடமிருந்து பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் கூறினார்.

TAGS: