குவாந்தான், கெபெங்கில் லினாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துவரும் லினாஸ் கோர்ப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது.
அந்த இணையதளத்தை, லினாசை நிறுத்துக, மலேசியாவை காப்பாற்றுக என்று எழுதப்பட்ட கருப்புநிறக் கணினித்திரை மூடிக்கொண்டிருந்தது. அரசாங்கத்திடம் தற்காலிக உரிமம் (டிஓஎல்) பெற்றுள்ள அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவிக்க அவ்வாறு செய்யப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.
இன்று காலை பின்னேரம் அந்த இணையத்தளத்துக்குள் புகவும் முடியவில்லை.
அந்தத் தளம் கடந்த பிப்ரவரியில், லினாஸுக்கு எதிராக குவாந்தானில் பேரணி ஒன்று நடைபெற்றபோதும் இதேபோன்றுதான் தாக்குதலுக்கு இலக்கானது.அந்த ஆலையால் கதிரியக்கம் பரவும் அபாயம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கருதுவதால் அதற்கெதிராக அப்பேரணியை நடத்தினார்கள்.
இதனிடையே லினாஸ், அதற்கு எதிரான குறைகூறல்களுக்குத் தடை விதிக்கக் கோரி செய்த மனுமீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லினாஸ்-எதிர்ப்பு இயக்கமான சேவ் மலேசியா ஸ்டோப் லினாஸ் (எஸ்எம்எஸ்எல்)-க்கு எதிராக லினாஸ் கடந்த மாதம் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தது.
அம்மனுவில் எதிர்வாதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவரும் எஸ்எம்எஸ்எல் பேச்சாளருமான டான் புன் டீட்(இடம்), “ஜனநாயகத்தில் மக்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை உண்டு”, என நேற்றுத் தெரிவித்தார்.
அவரே இன்று விடுத்த அறிக்கை ஒன்றில்,“உலகின் மிகப் பெரிய அரிய மண் ஆலை ஒன்று சதுப்புநிலப்பகுதியில் கடலுக்கு அருகில், மக்கள் வாழும் பகுதிக்கு அருகில், மக்களுடன் ஆலோசனை கலக்கப்படாமல் கட்டப்படுகிறது. தகவலறிந்த மக்கள் அதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது”, என்றார்.
கடந்த மாதம் அந்த இயக்கம், டிஓஎல்-லை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவியல், தொழிநுட்பம், புத்தாக்க அமைச்சிடம் விண்ணப்பித்துக் கொண்டது. ஆனால், அம்முயற்சி வெற்றிபெறவில்லை.