சிலாங்கூர் அரசு ஹரி ராயா போனஸ் அளிப்பதில் பிஎன் அரசாங்கத்தை மிஞ்சி விட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாதச் சம்பளத்தை போனசாகவும் அதற்குமேல் ரிம200 சேமிப்புத் தொகையாகவும் வழங்குகிறது.
கூட்டரசு அரசின் போனஸ் ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் மாநில அரசின் போனஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.
ஹரி ராயா கொண்டாட்டத்துக்கு உதவியாக அரைமாதச் சம்பளம் போனஸாக வழங்கப்படுகிறது என்று காலிட் கூறினார்.
“அத்துடன் சிம்பானான் சிலாங்கூர்கூ என்ற பெயரில் கூடுதல் போனஸாக ரிம200 கொடுப்பதென்றும் சிலாங்கூர் அரசு முடிவு செய்துள்ளது”, என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டு போனஸ் தொகைகளும் அரசு ஊழியர் வங்கிக் கணக்கில் அடுத்த வாரம் சேர்ப்பிக்கப்படும்.
இவ்வாண்டு போனஸுக்காக அரசு ரிம20 மில்லியனை ஒதுக்கி வைத்திருப்பதாக காலிட் கூறினார்.
“போனஸ், ஹரி ராயா கொண்டாட ஏற்பாடுகள் செய்துவரும் அரசு ஊழியர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது.
“அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் எதிர்காலத்துக்காக சேமிப்பதையும் ஊக்குவிக்கிறோம்”, என்றாரவர்.
நஜிப்,அரசாங்க ஊழியர்களுக்கு அரை-மாதச் சம்பளம், குறைந்த பட்சம் ரிம500, போனசாக வழங்கப்படும் என்றும் பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிறப்புத் தொகையாக ரிம500 பெறுவார்கள் என்றும் நேற்று அறிவித்தார்.
போனஸ் கொடுக்க ரிம2.2பில்லியன் தேவைப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் அதற்கான “நிதி ஆற்றலை” அரசாங்கம் பெற்றிருப்பதாகவும் சொன்னார்.