கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இண்ட்ராப் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது வாய்ப்புக் குறைந்த இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதுடன் அவர்களைக் குற்றச்செயல்களின் பக்கமாகக் கொண்டு செல்லும்.
“வாகனங்களைத் திரும்ப எடுத்துச்செல்வோர் அதற்கான உரிமம் பெற்றிருப்பதைக் கட்டாயமாக்க உள்நாட்டு வாணிக அமைச்சு செய்துள்ள முடிவு நாடுமுழுக்க காரைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும்”, என்று இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமார் கூறினார்.
உடைமை மீட்புச் சட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் பிரதமர் நஜிப்புக்கும் உள்நாடு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கூப்புக்கும் எழுதிய திறந்த மடலில் உதயகுமார் இவ்வாறு கூறினார்.
காரைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அமைச்சிடம் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும் என்று நேற்று சினார் ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.காரை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை சட்டத்துக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்யப்படுவதாக அது கூறியது.
காரைத் திரும்ப எடுத்துச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலர் வன்முறைகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் உண்டு என அமைச்சின் கோலாலம்பூர் இயக்குனர் அபு சமா ஷாபுதின் கூறியதாக அது தெரிவித்தது.
ஆனால், இப்புதிய சட்டத்தால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய உதயகுமார் அவர்களில் பலர் உரிமம் பெறத் தகுதி பெற மாட்டார்கள் என்றார்.
“இப்போதைய சட்டப்படி, குற்றப்பதிவு உள்ளவர்கள்(எங்களைப் பொறுத்தவரை இவர்களில் பலர் குற்றமற்றவர்கள். ஏழ்மை பிணை செலுத்த முடியாமை, வழக்கறிஞர் வைத்துக்கொள்ள முடியாமை காரணமாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டவர்கள்)அத்தொழிலில் ஈடுபட அமைச்சு அனுமதிக்காது.
“அது போக, முன்னாள் குற்றவாளிகள் சமுதாயத்தில் ஒன்றிணைய மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அரசாங்கம் அறிவித்த கொள்கை என்னவாயிற்று?”, என்றவர் வினவினர்.
இதற்குப் பதிலாக வங்கிகள் மற்றும் நிதிக் கழகங்கள் வழங்கிய அதிகாரத்துடன் செயல்படும் கார் மீட்பாளர்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி அவர்களைக் கவனமாகக் கண்காணித்து வர வேண்டும் என்று உதயகுமார் கூறினார்.
“முரட்டுத்தனமாக நடந்துகொள்வோரை எச்சரிக்கலாம்.தொடக்கத்தில் ஒரு மாதம் பிறகு சில மாதங்கள் இடைநீக்கம் செய்யலாம், மோசமான நிலவரங்களில் அவர்களைக் கருப்புப்பட்டியலில் சேர்த்துவிடலாம்.
“கார் மீட்பாளர்களுக்குக் களங்கம் உண்டுபண்ணும் வகையில் முரட்டுத்தனமாகவும் சட்டத்தை மீறியும் நடந்துகொள்வோரை மன்னிப்பதற்கில்லை”, என்றாரவர்.