பெர்சே: இசி தீர்வு காண வேண்டும், சாக்குப்போக்கு கூறக்கூடாது

தேர்தல் சீர்திருத்த போராட்டக் குழு பெர்சே தேர்தல் வாக்காளர் பட்டியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் (இசி) தீர்வு காண வேண்டுமே தவிர சாக்குப்போக்கு கூறக்கூடாது என்று அந்த ஆணையத்தை கடிந்துகொண்டது.

“தேர்தல் மோசடி பற்றிய எடுத்துக்காட்டுகள் பணியாளர்களின் தவறுகள் என்றும், எப்போதாவது ஒரு முறை ஏற்படும் தவறுகள் என்றும் நிராகரிக்கப்படுகின்றன. சமீபத்தில் இசி வெளியிட்டுள்ள ஒரு கையேட்டில் அதன் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிரச்னைகளைக் கையாள்வதற்கு அதனிடம்  அதிகாரம் இல்லை என்று  தன்னைத் தொடர்ந்து வர்ணித்துக்கொள்கிறது.

“தவறுகளுக்கான பொறுப்பை தேசியப் பதிவு இலாகா மீது போட்டு விடுவது வசதியான சாக்குப்போக்கு. ஆனால், ஒரு தூய்மையான, மிகச் சரியான மற்றும் இன்று வரையிலான தேர்தல் பட்டியலை இசி வைத்திருக்க வேண்டியதற்கான நேர்மையான கடப்பாட்டை அது காட்டவில்லை”, என்று பெர்சே அதன் அறிக்கையில் கூறுகிறது.

இசி மிக அண்மையில் வெளியிட்ட “தேர்தல் பட்டியல்: பிரச்னைகளும் தெளிவாக்கங்களும்” என்ற கையேட்டில் பெர்சே மற்றும் இதர அமைப்புகள் வெளிக்கொணர்ந்த பல்வேறு குளறுபடிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பிரச்னைகளைக் களைவதற்கான தீர்வுகள் எதுவும் அதில் காணப்படவில்லை.

தேர்தல் பட்டியலில் காணப்படும் முறைகேடுகளையும் மோசடிகளையும் களைவதற்கு இசி நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெர்சே கூறுகிறது.

இசி அளித்துள்ள அதன் விளக்கத்தில் பூசிமெழுகப்பட்ட பிரச்னைகளில் கீழ்க்கண்டவை அடங்கும் என்று பெர்சே கூறுகிறது:

1. தேர்தல் பட்டியலில் ஐயத்திற்கிடமான வாக்காளர்கள்.

2. இராணுவம் மற்றும் போலீஸ் ஆகியவற்றிலிருந்து ஐயத்திற்கிடமான புதிய வாக்காளர்கள்.

3. ஆண், பெண் பால்களில் குழப்பம், ஒரே மாதிரியான பெயர் மற்றும்/அல்லது பிறந்த நாள்.

4. வாக்காளர்களின் முழுமையற்ற முகவரிகள்.

அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இசி தேர்தல் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து ஐயத்திற்குரிய வாக்காளர்கள் களையெடுக்கப்படுவதை நஜிப் நிருவாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பெர்சே வற்புறுத்திக் கேட்டுக்கொண்டது.