கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் நிகழ்ந்துவிட்டதை இசி ஒப்பியது

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் முகவரிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பதற்குக் கவனக்குறைவே காரணம் என்பதை ஒப்புக்கொள்ளும் தேர்தல் ஆணையம் (இசி) அதைத் திருத்தும் முயற்சிகள் நடப்பதாகக் கூறிற்று.

இசி அண்மையில் வெளியிட்டிருக்கும் ‘வாக்காளர் பட்டியல்: விவகாரங்களும் விளக்கங்களும்’ என்ற கையேட்டில் வாக்காளர்கள் சிலரின் முகவரிகள் முழுமையாக இடம்பெறாததற்குக் காரணத்தை விளக்கியுள்ளது.

இதன் தொடர்பில் இசி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள விசயம் இதுதான்: வாக்காளராக பதிவுசெய்துகொள்ள விண்ணப்பம் செய்வோரும் விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவி செய்வோரும் முழு முகவரிகளைக் கொடுப்பதில்லை. குறிப்பாக, 2002 ஜூலைக்குமுன் பதிவு செய்துகொண்டவரிடையேதான் இக்குறைபாடு அதிகம்.

“இசியும் அதைப் பெரிய குறையாக நினைக்காமல், அவர்களைப் பதிவு செய்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தது”.

பல மாநிலங்களில்  நகர்மயமாதல் விரைவாக நடந்தேறியுள்ள போதிலும் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் போன்றவற்றில்கூட குடிசைப் பகுதிகள் இன்னமும் இருப்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.அங்கு வீடுகளுக்கு தனி எண்கள் கிடையாது. பெரும்பாலும் சாலைகளின் பெயர்களைத்தான் வீட்டு முகவரியாக பயன்படுத்துவார்கள்.

“கடிதப் போக்குவரத்துக்கு அங்குள்ள காப்பிக்கடைகளின் முகவரியைப் பயன்படுத்திக்கொள்வார்கள்”.

இப்போது வாக்காளர்களின் முழு முகவரிகளைப் பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டிருப்பதாக இசி கூறியது.

முகவரிகள் முழுமையாக இல்லாத காரணத்தால் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வது கடினமாக உள்ளதென்று மாற்றரசுக் கட்சிகள் குறைகூறி வந்துள்ளன.

இது தவிர,அக்கையேட்டில் மலேசியாகினியில் வாக்காளர் பட்டியல் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த பல புகார்கள் குறித்தும் இசி விளக்கமளித்துள்ளது.

TAGS: