பர்மாவின் வடபகுதியில் ரக்கீன் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடர்ந்து சுமார் எண்பதினாயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐநா அமைப்பின் அகதிகளுக்கான நிறுவனமான யுஎன்எச்சிஆர் அறிவித்துள்ளது.
இப்படி வெளியேறியவர்கள் முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும், அவசர இருப்பிடத் தேவைகளுக்காக, மேலதிகமாக கூடாரங்கள் விமானமூலம் கொண்டுவரப்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ரக்கீன் மாநிலத்தில் மனித உரிமைகள் அவமதிக்கப்படுவது இன்னும் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள்,கவலை தெரிவித்திருப்பதுடன், இந்த விவகாரம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பர்மிய காவல் துறையினர், சிறுபான்மையின மக்களை, குறிப்பாக றோஹின் இன மக்களை இலக்கு வைத்து தாக்குவதாக கூறப்படுவதாகவும் நவநீதம்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.