சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டுடன் தொடர்புகொண்ட சுவாரா ரஹ்யாட் மலேசியா (சுவாராம்), 1956 நிறுவனச் சட்டம் அல்லது 1965 நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று மலேசிய நிறுவன ஆணையம் (சிசிஎம்) கூறுகிறது.
மறுபுறம், சுவாரா இனிஷியேடிப் மட்டுமே 2001-இல் குவா கியா சூங், இயோ செங் குவா ஆகிய இருவரையும் இயக்குனர்களைக் கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சிசிஎம் தலைமை செயல் அதிகாரி முகம்மட் நயிம் டாருவிஷ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதன் சுயவிவரக் குறிப்பிலிருந்து மனித உரிமை இயக்கங்களையும் அதன் தொடர்பான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வதே அதன் தொழில் என்பது தெரிய வருவதாக அவர் கூறினார்.
குவா, இயோ இருவருமே ரிம2 மூலதனத்தில் அமைக்கப்பட்ட அந்நிறுவனத்தின் பங்குதாரர்களும் ஆவர்.
நிறுவனச் சட்டத்தின்படி கடந்த நான்காண்டுகளுக்கான கணக்கறிக்கைகளைப் பார்வைக்கு அனுப்ப வேண்டுமாய் சிசிஎம் அதற்கு அறிவிக்கை அனுப்பி வைத்திருப்பதாகவும் நயிம் குறிப்பிட்டார்.
“கணக்கு வைப்புமுறை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவ்வாறு செய்யப்பட்டது”, என்று தெரிவித்தவர், சுவாரா இனிஷியேடிவ் ஒரு வாரத்துக்குமுன் தாக்கல் செய்த ஆவணங்களையெல்லாம் சிசிஎம் பார்வையிட்டு வருவதாகவும் கூறினார்.
சிசிஎம், நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு என்ற முறையில் நிறுவனங்கள் பற்றிப் புகார் செய்யப்படும்போது அல்லது விவகாரங்கள் எழும்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமானதுதான் என்றாரவர்.