ஒலிம்பிக் அரங்கில் பாராசூட்டில் இருந்து குதித்த ‘ராணி எலிசபெத்’

லண்டன்: லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா அன்று காண்பிக்கப்பட்ட வீடியோவில் ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து ஒலிம்பிக் அரங்கில் குதித்தார் இங்கிலாந்து ‘ராணி எலிசபெத்’.

லண்டனில் கடந்த 27-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. துவக்க விழா நடந்த ஒலிம்பிக் அரங்கில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்கிறார். அங்கு அவரை இங்கிலாந்து ராணி எலிசபெத் வரவேற்கிறார். பின்னர் கிரெய்க் ராணியை ஹெலிகாப்டருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஒலிம்பிக் அரங்கிற்கு வருகின்றனர்.

அரங்கத்திற்கு வந்தவுடன் ஹெலிகாப்டர் பல நூறு அடி உயரத்தில் வானில் வட்டமிடுகிறது. அப்போது அதில் இருந்து ராணியும், கிரெய்கும் பாராசூட் மூலம் அரங்கில் வந்து குதிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் இந்த வயதிலும் ராணி எப்படி துணிச்சலாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார் என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் அரங்கில் வந்து குதித்தது கிரெய்கும் அல்ல, ராணியும் அல்ல. அவர்களைப் போன்று வேடமிட்டிருந்த வேறு இருவர். மார்க் சட்டன் (வயது 41) என்னும் ஸ்டண்ட் நடிகர் கிரெய்க் போன்று உடையணிந்தும், கேரி கானரி (வயது 43) என்னும் பாரா டைவிங் ஸ்பெஷலிஸ்ட் அச்சு அசல் ராணி எலிசபெத் போன்று உடையணிந்து, விக் வைத்து, மேக்அப் போட்டுக் கொண்டு வந்து குதித்தனர்.

அவர்கள் குதித்தவுடன் ஏற்கனவே அரங்கிற்கு அழைத்து வரப்பட்ட ராணியையும், கிரெய்கையும் அந்த இடத்தில் காண்பித்து விட்டனர்.