‘ஒரே நாடு, ஒரே ஆன்மா’- பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள்

பக்காத்தான் ராக்யாட் 55வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரத்துவ ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்னும் கருபொருளுக்கு மாற்றாக ‘Sebangsa, Senegara, Sejiwa’ (‘ஒரே இனம், ஒரே நாடு, ஒரே ஆன்மா’) என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது.

மின் அஞ்சல் வழியாக பெறப்பட்ட 250க்கும் மேற்பட்ட நுழைவுகளிலிருந்து அல்ஹைமி அடாம் என்பவர் எழுதியிருந்த அந்த மாற்றுக் கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டது.

அந்தத் தகவலை தேர்வுக் குழுவின் தலைவரான தேசிய இலக்கியவாதி ஏ சாமாட் சையட் வெளியிட்டார்.

“இறுதியில் நாங்கள் ஒரு சுலோகத்தைத் தேர்வு செய்தோம். அதனை பொருத்தமானதாக கருதுகிறோம்,” என சாமாட் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“அரசாங்கம் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். ஆனால் அந்த கருப்பொருள் மக்களிடமிருந்து வந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”

கூட்டரசு அரசாங்கம் அதிகாரத்துவக் கருப்பொருளை மாற்றுவதற்கு மறுத்தால் மாற்றுக் கருப்பொருளைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31ம் தேதி மெர்தேக்காவைக் கொண்டாடுவது பற்றி பக்காத்தான் விவாதிக்கும் என அங்கிருந்த பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.

“நாங்கள் அது குறித்து பக்காத்தான் மாநில அரசாங்கங்களுடன் விவாதிப்போம். கூட்டரசு அரசாங்கமும் அந்த யோசனையை ஏற்றுக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.”

மெர்தேக்கா தினத்திற்கான நடப்பு கருப்பொருள் சில மாதங்களுக்கு முன்னர் பிஎன் தொடங்கிய பிஎன் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டதால் அதனை மெர்தேக்கா கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை பக்காத்தான் வன்மையாக எதிர்க்கிறது.

TAGS: