வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகள்: பிஎன் யாரைப் பாதுகாக்கிறது ?

பிஎன் தலைவர்கள் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தங்கள் பைகளை நிரப்புவதற்காக வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளுக்கான நிலம் பற்றிய பிரச்னையை அரசியலாக்கக் கூடாது  என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று பிஎன் -னைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தாமான் மாங்கிஸில் (ஜாலான் ஜைனல் அபிடின்) உள்ள 0.44 ஹெக்டர் நிலத்தில் 140 அடுக்குமாடி வீடுகள் மட்டுமே கட்டப்பட முடியும் என்ற சூழ்நிலையில் அந்த நிலத்தில் மக்களுடைய வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளை மாநில அரசாங்கம் கட்ட வேண்டும் என ஏன் பிஎன் விரும்புகிறது என பினாங்கு மலாய்ப் பேரவையின் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் வினவினார்.

ஜாலான் எஸ்பி செல்லையாவில் பினாங்கு நகராட்சி மன்றத்துக்குச் சொந்தமான நிலம் ஒன்று மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானத்தைக் கொண்டுள்ள மக்களுடைய வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளைக் கட்டும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஹ்மாட் சொன்னார்.

2008ம் ஆண்டுக்கு முன்னர் பிஎன் நிர்வாகத்தின் போது குறைந்த வருமானம் பெறுவோர் வீடுகளை வாங்குவதற்கு ஏன் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் வினவினார்.

கூட்டரசு ஒதுக்கீடுகளைக் கொண்டு அரசாங்க நிலத்தை மேம்படுத்துவதில் அப்போதைய தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. அதில் சிலருடைய பைகளை நிரப்பிய மறைவான ஆதாயங்களும் இருந்தன,” என்றார் ரஹ்மாட்.

“பிஎன்-னிடம் எழுப்புவதற்கு அரசியல் பிரச்னைகள் வற்றி விட்டதாகத் தோன்றுகிறது. அது எழுப்பும் ஒவ்வொரு பிரச்னையும் அதனையே திருப்பி அடிக்கிறது,” என்றார் அவர்.

பினாங்கு மக்களுக்கு  வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளை வழங்குவதில் உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருந்தால் அது ஜாலான் ஜைனல் அபிடினில் உள்ள நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என ரஹ்மாட் கேட்டுக் கொண்டார்.

அது முடியாது என்றால் பிஎன் நடத்தும் “மலிவான அரசியல் காலப் போக்கில் அதனையே திருப்பி அடிக்கும்” என அவர் சொன்னார்.

முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையிலான மாநில அரசாங்கம் “ஏழைகளுக்குச் சொந்தமான நிலத்தை எடுத்துக் கொண்டு அதனை வர்த்தகர்களுக்கு விற்பதாக” மாநில பிஎன் இளைஞர் தலைவர் ஒ தொங் கியோங் குற்றம் சாட்டிய பின்னர் அந்த விவகாரம் தலை தூக்கியது.

தாமான் மாங்கிஸில் பொது வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் பற்றியே மாநில கெரக்கான் இளைஞர் தலைவருமான ஒ குறிப்பிட்டார்.

அந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு 350 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன.

அதன் இரண்டாவது கட்டத்தை டிஏபி தலைமையிலான அரசாங்கம் ரத்துச் செய்து விட்டு 2010ம் ஆண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவமனையைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் அந்த நிலத்தை விற்று விட்டது.

ஆனால் இரண்டாம் கட்டத்தில் வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஏதும் புலாவ் பினாங் நகராட்சி மன்றத்திடம் சமர்பிக்கப்படவில்லை  என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் வோங் ஹோன் வாய் கூறியுள்ளார்.

அந்தத் திட்டத்தின் முதலாம் கட்டம் 2001ம் ஆண்டு மே 10ம் தேதி அங்கீகாரிக்கப்பட்டது என்றும் அதற்கு பின்னர் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரையில் இரண்டாம் கட்டத்துக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என ரஹ்மாட் சொன்னார்.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏழு ஆண்டுகள் வரையில் அத்தகைய வீடுகள் தேவைப்பட்ட மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்றார் அவர்.

 

TAGS: