பாலஸ்தீன தனிநாடு : முழு ஆதரவு என்கிறார் மன்மோகன்

பாலஸ்தீனம் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவினை தரும் என இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங், பாலஸ்தீன அதிகாரபூர்வ அதிபருக்கு எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையின் 66-வது பொதுச்சபைக்கூட்டம் இன்று துவங்குகிறது. 193 நாடுகள் பங்கேற்கின்றன. இக்கூட்டத்தின் போது பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்கிறது. அப்போது பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையும் இடம் பெறுகிறது. இந்நிலையில் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங், பாலஸ்தீன குடியரசுத் தலைவர் அப்பாஸிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி எழுதிய ஒரு பக்க அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது; பாலஸ்தீனம் எப்போதும் இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளது. பாலஸ்தீனம் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. பாலஸ்தீனத்தின் தனித்தன்மையை இந்தியா மதிக்கிறது. எனவே கிழக்கு ஜெருசலம் நகரை தலைமையிடமாக கொண்டு பாலஸ்தீன தனி நாடு உதயமாக இந்தியா தனது முழு ஆதரவினை தரும், இதற்காக ஐ.நா. சபையிலும் இந்தியா சார்பில் வலியுறுத்துவோம் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் இதே இந்தியாதான் தமிழீழ தனிநாட்டுக் கோரிக்கைக்காக இலங்கையில் போராடிய தமிழ் மக்களை படுகொலை செய்ய முழு ஒத்துழைப்பையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.