தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் கடன்கள் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனைகளை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.
பொது விசாரணைக்கு அதிகக் காலம் பிடிக்கும். மிகவும் நுட்பமானது என அவர் சொன்னார்.
ஆகவே அந்த விஷயத்தை ஆழமாக ஆராய்வதற்கு ஐந்து சுயேச்சை கணக்காய்வு நிறுவனங்களை நியமிப்பதே சிறந்த வழி என்ற தமது நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இறுதியில் கணக்காய்வாளர்கள் தங்கள் முடிவுகளைப் பொது மக்களுக்கு அறிவிப்பார்கள்.
“இவ்வாறு செய்வதின் வழி நாம் அதிக நேரத்தை விரயம் செய்ய மாட்டோம். பொது விசாரணைகள் நல்லதுதான். ஆனால் அதிக காலம் பிடிக்கும். எடுத்துக்காட்டுக்கு நான் இப்போது தலாம் பற்றிப் பேசுவதே இல்லை. காரணம் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப விளக்குவதற்கு 98 விழுக்காடு நேரம் போய் விடுகின்றது.”
“தேவைப்படும் பதில்களை அளிக்க இரண்டு விழுக்காடு நேரம் மட்டுமே செலவாகிறது. ஆகவே அந்த விவகாரம் மீது மௌனமாக இருந்து அந்த இரண்டு விழுக்காட்டை நன்கு பயன்படுத்தப் போகிறேன்.”
தலாம் விவகாரம் மீது பொது விசாரணையை சிலாங்கூர் நடத்த வேண்டும் என மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தலைவர் ரேமன் நவரத்னம் ஜுலை மாதம் 17ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.