மறைந்து வாழும் தனித் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மீண்டும் தலைகாட்டியுள்ளதுடன் இன்னொரு குண்டையும் போட்டிருக்கிறார்-அவர் இந்தியாவில் நாடுகடந்து வாழ்ந்தபோது அவருக்கு இரண்டாவது தடவையாக கையூட்டு கொடுக்க முயன்றார்களாம்-பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைக் களங்கப்படுத்துவதற்காக.
கடந்த மாதம் கோலாலம்பூரில் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சரவாக் மாநிலத் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்குமுன் அவர்கள் தம்மை அணுகியதாக பாலசுப்ரமணியம் கூறினார்.
“பெர்த்’திலிருந்து ‘நல்ல செய்தியை’ப் பெற்ற அவர்கள் ‘இந்தியாவிலிருந்தும் நல்ல செய்திகளை’ எதிர்பார்த்தார்கள்”, என்று பூடகமாக பேசிய பாலசுப்ரமணியம் மேலும் விளக்கமளிக்க மறுத்தார்.
அது, இரு தரப்புகளுமே வாக்காளர்களைக் கவர்வதற்காக முழுமூச்சாக முயன்று கொண்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில்தான் ராஜா பெட்ராவுடன் நடத்தப்பட்ட நேர்காணல் டிவி3-இல் ஒளியேறியது. அந்தச் சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பதிவுசெய்யப்பட்ட நேர்காணல் அது.
ராஜா பெட்ரா அந்நேர்காணலில், பிரதமர் நஜிப் ரசாக்கையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் அல்டான்துயா ஷாரீபுவின் கொலையுடன் தொடர்புப்படுத்தி செய்திருந்த சத்திய பிரமாணத்தை (எஸ்டி) மறுத்திருந்தார்.
பிரிட்டனில் நாடுகடந்து வாழும் ராஜா பெட்ரா, அந்த எஸ்டி, அப்துல்லா அஹ்மட் படாவிக்குப் பின் நஜிப் பிரதமர் பதவியேற்பதைத் தடுப்பதில் குறியாக இருந்த பிகேஆர் தலைவர்கள் கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
வழக்குரைஞர்களைச் சுற்றலில் விட்ட பாலா
பாலசுப்ரமணியத்தைப் பொறுத்தவரை, 2008-இல் நஜிப்பை மங்கோலிய பெண்ணான அல்டான்துயா கொலையுடன் தொடர்புப்படுத்தி அவர் செய்த எஸ்டி-இல் பொய்யான தகவல்களைச் சொல்ல அன்வாரும் மற்ற பிகேஆர் தலைவர்களும் பணம் கொடுத்தார்கள் என்று கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டாராம்.
தமது முதலாவது சத்திய பிரமாணம் ‘அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து வலுக்கட்டாயமாக செய்யப்பட்டது’ என்று கூறுமாறு மிரட்டியும் பணம் கொடுத்தும் இரண்டாவது சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்ய வைத்த ஒரு வணிகரான தீபக் ஜெய்கிஷனும் (வலம்) சுரேஷ் என்னும் போலீஸ் அதிகாரியும் கேட்டுக்கொண்டார்கள் என்றாரவர்.
அல்டான்துயா கொலைவழக்கில் முக்கிய சாட்சியான பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் செய்த பிறகு இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
இப்படி பல்டி அடிப்பதற்கு ரிம5மில்லியன் கொடுப்பதாக உறுதி கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், தவணைமுறையில் ரிம700,000 மட்டுமே பெற்றதாக பாலாசுப்ரமணியம் சொன்னார். அதன்பின் பணம் கொடுப்பது நின்று போனது.
சரவாக் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கையில் தீபக்கும் சுரேஷும் இருதரப்புக்கும் பொது நண்பரான சிவா மூலமாக அவரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
பாலசுப்ரணியம், அப்போது தம் முன்னாள் ஊழியர் ஒருவருடன் வட இந்தியாவில் ஆலய தரிசனத்துக்குச் சென்றிருந்தார். அதனால், இந்தியாவில் அவரது வீட்டில் இருந்த அவரின் மனைவியிடம் சுரேஷும் தீபக்கும் பாலாவுடன் பேச விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் சிவா.
இதை அவர் பாலாவிடம் தெரியப்படுத்தினார்.
“நான் என் மனைவியிடம் எவருடனும் பேச விரும்பவில்லை”, என்று கூறினேன் என்று பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
அது சிவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விடுவதாக இல்லை. சுரேஷ் தொடர்ந்து பாலசுப்ரமணியத்தின் மனைவியைத் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.
“அவர்கள் என் மனைவிக்குப் ‘பெருந் தொல்லை’ கொடுத்தார்கள். என் மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை”.
மனைவிக்குக் கொடுக்கப்படும் தொல்லைகளைத் தாங்க மாட்டாதவராய் முடிவில் சுரேஷுடனும் தீபக்குடனும் பேச ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்குமுன் தம் மலேசிய வழக்குரைஞர் அமெரிக் சித்துவின் ஆலோசனையைப் பெறவும் அவர் தவறவில்லை.
அன்வாரைக் களங்கப்படுத்த வீடியோ ஒளிப்பதிவு
அமெரிக் அவர்கள் சொல்படி நடக்குமாறு கூறியதுடன் நிகழ்வுகளைப் பதிவு செய்யுமாறும் ஆலோசனை கூறினார்.
“அவர்களுடன் பேசுங்கள், ஏதாவது தடயங்கள் கிடைத்தால் விடாதீர்கள்… உங்கள் பாதுகாப்புக்குப் பயன்படும்”, என்று அந்த வழக்குரை அறிவுரை கூறினார்.
பிறகு பாலசுப்ரமணியத்தின் மனைவி சுரேஷுக்கு பாலாவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்க சுரேஷ் நேரடியாகவே அவரைத் தொடர்புகொண்டு பேசினார்.
“ ரிம200,000 ரொக்கமும் பெர்ஜெயா டைம்சில் ஒரு கொண்டோவும் கொடுக்கப்படும். எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் நீங்கள் நாடு திரும்பலாம். முடிந்தால், நீங்கள் தொழில் செய்யவும் ஏற்பாடு செய்வேன்”, என்று சுரேஷ் பேரம் பேசியிருக்கிறார்.
இதற்குக் கைம்மாறாக சுரேஷ் என்ன எதிர்பார்க்கிறார் என்று பாலசுப்ரமணியம் வினவியுள்ளார்.தாங்கள் தயாரித்துள்ள ஒரு அறிக்கையைப் பாலசுப்ரமணியம் வாசிக்க வேண்டும் அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
அது என்ன அறிக்கை என்று கேட்டதற்கு,“பிகேஆர் தலைவரைக் (அன்வார்) களங்கப்படுத்தும்” அறிக்கை என்று பாலசுப்ரமணியம் என்று வருணித்தார்.
அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு கூறியது: “தாம் விரைவில் பிரதமராகப் போவதாகக் கூறி என்னை நம்பவைத்த அன்வார் கேட்டுக்கொண்டதால் தாம் இரண்டாவது எஸ்டியை மாற்ற வேண்டியதாயிற்று”.
அன்வார் ரிம200,000 ரொக்கத்தை “ஒரு பையில் போட்டு”க் கொடுத்ததுடன் ஒவ்வொரு மாதமும் ரிம50,000 அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று சொன்னதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலில் பாலசுப்ரமணியம் தாமே சொந்தமாக அறிக்கையை வீடியோவில் பதிவு செய்ய மறுத்தார். டிவி3, உத்துசான் மலேசியா செய்தியாளர்களுடன் தீபக்கும் சுரேஷும் இந்தியா வந்தால் அவர்கள் சொல்வதுபோல் செய்வதாகக் கூறினார்.
அதன்பின் ஒரு நாள் முழுக்க தீபக் அவருடன் பேசி அவசரமாக அந்த வீடியோ பதிவு தேவைப்படுவதாக வலியுறுத்தினார்.முடிவில் அறிக்கையை வீடியோவில் பதிவுசெய்ய பாலசுப்ரமணியமும் ஒப்புக்கொண்டார்.
சுரேஷ், பாலசுப்ரமணியத்தின் மனைவி கணக்கில் ரிம100,000 போட்டார்.பெர்ஜெயா டைம்ஸ் கொண்டோமினியத்துக்கான விற்பனை-கொள்முதல் உடன்பாட்டையும் சிவா மூலமாக அனுப்பி வைத்திருந்தனர்.
ஆனால் அதன்பின்னர்தான் பாலசுப்ரமணியம் அவரது கைவரிசையைக் காட்டினார்.
‘தொலைபேசி உரையாடல் பதிவுசெய்யப்பட்டதால் கடுங் கோபம் கொண்டார் தீபக்’
“வீடியோ தயாராகிவிட்டது.மின்னஞ்சலில் அனுப்ப வேண்டியதுதான். நான் என்ன செய்தேன், அதை என் வழக்குரைஞருக்கு அனுப்பி வைத்தேன்.தீபக் அழைத்தபோது தவறுதலாக என் வழக்குரைஞருக்கு அனுப்பி வைத்துவிட்டதாகக் கூறினேன்.அதற்காக மன்னிப்பும் கேட்டேன்.
அதைக் கேட்டு தீபக் கடுங் கோபமுற்றார்.
“கண்டபடி சத்தம் போட்டார்.அது எங்களின் கடைசி தொலைபேசி உரையாடல்.அதைப் பதிவு செய்து விட்டேன்”.
திட்டம்போட்டுத்தான் அப்படிச் செய்தாரா என்று வினவியதற்கு “ஆம்” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தார் பாலசுப்ரமணியம்.
“அதுதான் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று நினைத்தேன். நான் பணம் கேட்கவில்லை. முதல் சத்திய பிரமாணம் செய்தபோது அவர்கள் என்மீது பாய்ந்தார்கள். என் குடும்ப மொத்தத்தையும் இந்தியாவுக்குக் கிளப்பி விட்டார்கள்.
“என் தாயை இழந்தேன். எல்லாவற்றையும் இழந்தேன். இப்போது நான் மலேசியாவில். என் மனைவி இந்தியாவில்”.
பாலசுப்ரமணியம் இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டாராம். நஜிப் பிரதமரான பின்னர் அவர் மலேசியாவுக்கு இரகசியமாக வரப்போக இருந்திருக்கிறார்.
பாலசுப்ரமணியம் தம் மனைவியின் வங்கிக்கணக்கில் சுரேஷ் போட்ட பணத்தைத் தம் வழக்குரைஞரிடம் கொடுத்து கம்பள விற்பனையாளரும் பிரதமரின் மனைவி ரோஸ்மாவின் நெருங்கிய நண்பருமான தீபக்கிடமே திருப்பிக் கொடுக்குமாறு கூறிவிட்டார். கொண்டோமினியத்துக்கான விற்பனை-கொள்முதல் ஒப்பந்தமும் இப்போது வழக்குரைஞரிடம்தான் உள்ளது.
தீபக்குடன் நடத்திய உரையாடல்கள் சிலவற்றைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். அதைத் தம் பாதுகாப்புக்காக வைத்திருப்பதாகக் கூறினார்.