இரண்டு மெர்டேகா கருப்பொருள்களைக் கொண்டிருப்பதில் பிளவுபடுத்தும் நோக்கமில்லை

பக்காத்தான் ரக்யாட் மாநிலங்களில் தேசிய நாள் கொண்டாட்டத்துக்கு வேறு கருப்பொருளைப் பயன்படுத்துவது மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி அல்ல என்று கூறிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், நடப்புக் கருப்பொருள்தான் “குறுகிய கட்சி மனப்பான்மை கொண்டது” என்றார்.

“ஒன்றே நாடு ஒன்றே மூச்சு என்பது எப்படிப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்?”, என்றவர் வினவினார்.

பக்காத்தான் மாநிலங்கள் Sebangsa, Senegara, Sejiwa (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற மாற்றுக் கருப்பொருளைப் பயன்படுத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாரவர்.

ஆனால், பிஎன் அரசாங்கம் Janji Ditepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்ற அதன் இப்போதைய கருப்பொருளை மாற்றி எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு புதிய கருப்பொருளைக் கொண்டுவந்தால் அதையே பின்பற்றுமாறு தம் சகாக்களிடம் கூறத் தயாராக இருப்பதாகவும் அன்வார் சொன்னார்.

தேசிய உணர்வை வலியுறுத்தாமல் நன்றிக்கடன் தீர்ப்பது பற்றி எடுத்துரைக்கும் இப்போதைய கருப்பொருளைப்போல் அன்றி பக்காத்தானின் மாற்றுக் கருப்பொருள் மக்களைக் “குழப்பாது”, என்றாரவர்.

பக்காத்தான் நேற்று அதன் கருப்பொருளை அறிவித்தது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 250 வாசகங்களிலிருந்து தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்-டைத் தலைவராகக் கொண்ட குழு அதைத் தேர்ந்தெடுத்தது.

மெர்டேகா கொண்டாட்டத்துக்கான தேசிய கருப்பொருள் பிஎன்னின் தேர்தல் பரப்புரைக்கான கருப்பொருளைக் கொண்டிருக்கிறது என மாற்றரசுக் கட்சி அதை நிராகரித்தது.

TAGS: