ஏஜி, பிஎன்-னுக்கு பெரிய தடைக்கல் என்கிறார் பாங்

அப்துல் கனி பட்டெய்லை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஏஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆலோசனைக் குழு உறுப்பினர் ரோப்ர்ட் பாங் கூறினார்.

அப்துல் கனி பிஎன்-னுக்கு சுமையாகி விட்டதை நஜிப் உணர வேண்டும் என்றார் அவர்.

“பிஎன் முயற்சிகளுக்கு குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வெல்வதற்கு பிஎன் முயலும் போது அதற்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கக் கூடாது.”

“அத்துடன் ஏஜி தொடர்ந்து மௌனமாக இருந்து தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கா விட்டால் அது பிஎன் முயற்சிகளுக்கு நிச்சயம் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும்,” என்றார் பாங்.

வழக்குரைஞர் ரோஸ்லி டாஹ்லானைப் பழி வாங்கும் எண்ணத்தை அப்துல் கனி கொண்டுள்ளதாகவும் பாங் கூறிக் கொண்டார்.

அப்துல் கனி எம்ஏசிசி ஊழலுக்காக விசாரித்த முன்னாள் மலேசிய விமான நிறுவனத் தலைவர் தாஜுடின் ராம்லியுடன் அணுக்கமான உறவுகளை வைத்திருந்தார் என்றும் ஹோ ஹப் பெர்ஹாட் வாரிய தரப்பில் ஒரு தரப்புக்கு ஆதரவாக இயங்கினார் என்றும் பாங் கூறிக் கொண்டார்.

தாம் அந்த விஷயங்களை ஏற்கனவே எழுப்பியுள்ளதாகவும் ஆனால் அப்துல் கனியைத் தற்காப்பதற்காக ‘கூலிக்கு’ அமர்த்தப்பட்ட அடையாளம் தெரியாத வலைப்பதிவாளர்களால் தாம் “கடுமையாக” விமர்சிக்கப்பட்டதாகவும் பாங் தெரிவித்தார்.

புத்தகத்தின் உள்ளடக்கத்தை விசாரியுங்கள்

Tan Sri Abdul Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah? என்னும் தலைப்பில்  வழக்குரைஞர் ஜைனல் அபிடின் அகமட் எழுதிய புத்தகத்தை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கதாபாத்திரத்தின் அதிகார அத்துமீறல்கள், ஊழல் கிரிமினல் நடவடிக்கைகள் எனக் கூறப்படும் விஷயங்களை அந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன.

“அதனை விசாரித்து அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் பொய்யாக இருந்தால் ஆசிரியரைக் கைது செய்து குற்றம் சாட்டுமாறும் அவதூறுக்காக ஆசிரியர் மீது வழக்குப் போடுமாறும் நான் அப்துல் கனிக்கு சவால் விடுக்கிறேன்.”

“இல்லை என்றால் அப்துல் கனிக்கு எதிரான அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு எம்ஏசிசி-க்கும் போலீஸுக்கும் நான் சவால் விடுக்கிறேன்,” என்றார் பாங்.

அந்த விசாரணைக்குப் பாதகம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு முறையான விசாரணை நடைபெறும் வரையில் அப்துல் கனி தமது கடமைகளைலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் பாங் கேட்டுக் கொண்டார்.

அந்த நிருபர்கள் சந்திப்புக்குப் பின்னர் விசாரணைகள் தொடங்குவதற்கு உதவியாக போலீசில் புகார் செய்யப் போவதாக அவர் சொன்னார்.

 

TAGS: