முஹைடின் இரண்டாவது தண்ணீர் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

சிலாங்கூர் தண்ணீர் விவகாரம் குறித்த அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்கு துணைப் பிரதமர் முஹைன் யாசின் இன்று தலைமை தாங்கினார்.

அந்தக் கூட்டம் எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சில் நடைபெற்றது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் நீர் விநியோகச் சேவை தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது அந்தக் குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையாகும்.

சிலாங்கூரில் நீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மீது செயலகமும் குழு உறுப்பினர்களும் சமர்பிக்கும் யோசனைகளையும் பரிந்துரைகளையும் குழு பரீசிலித்து தனது முடிவுகளை அமைச்சரவைக்குத் தெரிவிக்கும்.

ஜுலை 23ம் தேதி அந்தக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd-ன் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் தெரிவித்த யோசனையை கூட்டரசு அரசாங்கம் நிராகரிப்பதாக அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் முஹைடின் அறிவித்தார்.

திறந்த டெண்டர் வழி கூட்டரசு அரசாங்கம் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானத்தை அமலாக்கும் என்றும் எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சு அறிவித்துள்ளது.

2014ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றுக்குப் போதுமான நீர் விநியோகம் கிடைப்பதை லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் உறுதி செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெர்னாமா

 

TAGS: