தேசிய நாள் பாடல் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சு ஆராயும்

இவ்வாண்டு தேசிய நாள் பாடலான ‘Janji Ditepati’  இந்தோனேசியாவின் சுவிசேஷ துதிப்பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் அறிவித்துள்ளார்.

“மெர்டேகா பாடலான ‘Janji Ditepati’ திருடப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

“மாற்றரசுக் கட்சியினர் வெறுமனே குற்றம் சொல்லக்கூடாது”, என ரயிஸ் இன்று காலை தம் டிவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

அப்பாடல் திருடப்பட்டதாக கூறப்படுவதற்கு ரயிஸ் கடுமையான மறுப்பு தெரிவித்ததாக இன்றைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சிலும் செய்தி வெளிவந்துள்ளது.

“அந்த வலைப்பதிவர் பாடல் திருடப்பட்டது என்று கூறுவதை வன்மையாக மறுக்கிறோம்.அவர் தம் கூற்றுக்குத் தகுந்த ஆதாரம் காண்பிக்கத் தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்”, என்று ரயிஸ் கூறியதாக அச்செய்தித்தாள் கூறியிருந்தது.

இந்தோனேசிய வலைப்பதிவர் ஒருவர், Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) பாடல் ஜகார்த்தாவில் உள்ள கிறிஸ்துவ இசைக்குழுவின் பாடலான ‘Serukan Namanya’ (அவன் நாமம் சொல்லுவோம்) என்பதன் அப்பட்டமான திருட்டு என்று திங்கள்கிழமை  தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்ததாக அது மேலும் கூறியது.

மெர்டேகா பாடலுக்கான வரிகளை வரைந்துள்ள ரயிஸ், மாற்றரசுக் கட்சியினர் இக்குற்றச்சாட்டைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முனைவதைச் சாடினார் என்றும் அச்செய்தி கூறிற்று.

நேற்று, இசை அமைப்பாளர் ஜஸ்னி முகம்மட் யாக்கூப் தாமும் மேலும் இருவரும் (Arman E Six மற்றும் Aye) சேர்ந்து இசை அமைத்த பாடல்தான்  ‘Janji Ditepati’ என்றார்.

“அது உத்வேகம் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாடல். எந்தப் பாடலையும் பின்பற்றி அதை நாங்கள் உருவாக்கவில்லை”, என்றார்.

 

 

TAGS: