நீர் விவகாரம்:அமைச்சைச் சாடுகிறார் டிஏபி எம்பி

சிலாங்கூரில் நீர் விநியோகத்துக்கு குத்தகை உரிமைபெற்றுள்ள ஸபாஷ் நிறுவனத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதி மறுத்த எரிபொருள்,பச்சைத் தொழில்நுட்பம்,நீர் விவகார அமைச்சு அதற்கு அளித்த விளக்கம் “மிகவும் பலவீனமானது” என்று கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு சாடினார்.

மாநில அரசுக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருப்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று என அமைச்சு கூறியதாக நேற்று பெர்னாமா கூறியிருந்தது.

“அதை ஒரு காரணமாகக் காட்டக்கூடாது. செயல்திறமை இருக்கா என்று பார்க்க வேண்டும்;நிதி நிர்வாகம் நன்றாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.இரண்டுமே கேள்விக்குரியதாக இருக்கின்றன”, என்று சந்தியாகு குறிப்பிட்டார்.

மலேசியாகினி சந்தியாகுவைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஸபாஷ்  திரும்பத் திரும்ப ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகக் கூறினார்.2005-இல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குழாய்களைப்  பயன்படுத்துவதற்கு மாறாக  இந்தோனேசியாவிலிருந்து அது  குழாய்களைத் தருவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ரிம600மில்லியன் பெறுமதியுள்ள 72விழுக்காடு குத்தகைப் பணிகளை அது நேரடியாக  வழங்கியதும் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.ஒப்பந்தப்படி அதற்கு வெளிப்படையான  டெண்டர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசாங்கக் கணக்குத் தணிக்கையாளர்களே இந்த  விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மாதம்தோறும்(தாய் நிறுவனமான)புஞ்சாக் நியாகா ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு நிர்வாகக் கட்டணம் என்ற பெயரில் ரிம700,000கொடுக்கப்படுகிறது. எதற்கு இக்கட்டணம் கொடுக்கப்படுகிறது என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்”.

அங்கு நடப்பதைப் பார்க்கும்போது நிதிநிர்வாகம் சரியாக இல்லை என்ற எண்ணம்தான் தோன்றுகிறது என்றார் சந்தியாகு.சந்தியாகு நீர் தனியார்மயத்தை எதிர்க்கும் என்ஜிஓ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமாவார்.

இப்படிப்பட்ட நிர்வாகக்கேடும் நீர் விநியோகத்தைத் திறமையாக செய்ய முடியாதிருப்பதுமே ஒப்பந்தத்தை  ‘முடிவுக்குக் கொண்டுவர’ போதுமான காரணங்களாகும்.

“ஆனால்,மத்திய அரசு அதைச் செய்யவில்லை.ஏன்?”, என்றவர் வினவினார்.

இவ்விவகாரத்தைத் தீர்ப்பதில் மத்திய அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் புதிய நிர்வாகம் எப்படிப்பட்டது, நீர் விரயமாவதைத் தடுக்க அதன் திட்டம் என்ன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்.

“அதன்பின்னர் சிலாங்கூர் அரசின் திட்டம் திருப்தி அளிக்கவில்லை அல்லது சிலாங்கூருக்கு அதைச் செய்யும் திறன் இல்லை என்று சொன்னால் அது வேறு மாதிரி இருந்திருக்கும்”.

அப்படி அல்லாமல், ஸபாஷ் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும் சிலாங்கூரின் முயற்சியைத் தடுப்பதற்கு அது நீதிமன்ற வழக்கைச் சுட்டிக்காட்டுகிறது என்று சந்தியாகு கூறினார்.

TAGS: