தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்கும் பிரச்னையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வதற்கு சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் தலைமை தாங்குவார். உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த சட்ட நிபுணர்கள், பாகாங், திரங்கானு, கிளந்தான் ஆகியவற்றின் பேராளர்கள் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கோரிக்கைகள் மீதான எல்லா அம்சங்களையும் பரிசீலித்து கூட்டரசு அரசாங்கத்துக்கு பொருத்தமான பரிந்துரைகளை அந்தக் குழு, அமைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் வழங்கும் என நஜிப் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோரத்தில் கிடைக்கும் பெட்ரோலிய வருமானத்தில் ரொக்கத் தொகையைப் பெறுவதற்கு எந்த மாநிலங்களுக்கு தகுதி உண்டு என்பதையும் எவ்வளவு எப்படிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் அந்தக் குழு அடையாளம் காணும் என்றும் நஜிப் சொன்னார்.
கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகை வழங்குவது மீது பல விவாதங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் தொடர்பில் சிறப்புக் குழுவை அமைக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அந்தச் சிறப்புக் குழு அமைக்கப்படுவதைத் தொடர்ந்து தீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்கள் எழுப்பியுள்ள பிரச்னைகள் நியாயமான வெளிப்படையான சமமான முறையில் தீர்க்கப்படும் என்றும் கூட்டரசு அரசாங்கம் நம்புகிறது.
கிளந்தானுக்குத் தகுதி இல்லை
1974ம் ஆண்டு கிளந்தான் மாநில அரசாங்கமும் பெட்ரோனாஸும் செய்து கொண்ட ஒர் உடன்பாட்டின் கீழ் கிளந்தானில் கண்டு பிடிக்கப்பட்டு எடுக்கப்படும் எண்ணெய் மதிப்பில் ஐந்து விழுக்காட்டுக்கு சமமான ரொக்கத்தை ஆண்டுதோறும் பெட்ரோனாஸ் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும்.
மாநில கடற்பகுதியில் எடுக்கப்படும் பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு ரொக்கத் தொகையை கோருவதற்கு மட்டுமே உரிமை இருப்பதாக கூட்டரசு அரசாங்கம் கருதுகிறது. கிளந்தான் கடற்பகுதி என்பது மாநில கடற்கரையிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவுக்குள் இருப்பதாகும்.
“தற்போது கிளந்தான் கடற்பகுதியில் பெட்ரோலியம் எடுக்கப்படவில்லை. ஆகவே சட்ட அடிப்படையில் பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகை கோரும் உரிமை கிளந்தான் மாநில அரசுக்கு இல்லை,” என்றார் அவர்.