நுருல் இஸ்ஸா: சபா பிஎன்-னிலிருந்து பலர் வெளியேறக் கூடும் என்ற அச்சம் நஜிப்பை சூழ்ந்துள்ளது

சபாவில் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் அதிகமாக வெளியேறக் கூடும் என்ற அச்சம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சூழ்ந்துள்ளது. அத்துடன் ஆளும் கூட்டணியின் இரண்டு எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக நஜிப் அடுத்த வார இறுதியில் சபாவுக்குச் செல்கிறார்.

இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார்.

“அவர் அச்சமடைந்துள்ளாரா ? பிஎன்-னுக்குள் எல்லாம் ஒழுங்காக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருப்பது எனக்கு நினைவிருக்கிறது.”

சபாவில் பிஎன் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தாம் அங்கு செல்லவிருப்பதாக நேற்று நஜிப் அறிவித்தார்.

துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங்-கும் பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கின்-னும் பக்காத்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் நஜிப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்றாலும் நஜிப் வருகை சபா மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கும் என நுருல் நம்பவில்லை.

“மாற்றங்களைச் செய்யும் துணிச்சல் அவருக்கு இருப்பதாக நான் எண்ணவில்லை.

ஆர்சிஐ-யின் பணிகளை விரிவுபடுத்துங்கள்

சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையை ஆராய அமைக்கப்படும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தின் பணிகளை நஜிப் அறிவிப்பதால் அந்த மாநிலத்தில் பக்காத்தானுக்கு பெருகி வரும் ஆதரவைத் தடுத்த நிறுத்த முடியாது என்றும் நுருல் சொன்னார்.

“சபாவில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எல்லா கட்சித் தலைவர்களும் தொடருவர் என நான் நம்புகிறேன். நஜிப் என்ன கொடுக்க முன் வந்தாலும் நமது நோக்கத்திலிருந்து நாம் விலகக் கூடாது.”

“ஆர்சிஐ-யை அமைப்பதற்கும் எண்ணெய் எரி வாயு வருமானத்தில் 20 விழுக்காட்டை சபாவுக்கு உரிமப் பணமாகக் கொடுக்கவும் நாங்கள் வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்துள்ளோம்,” என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்ய அந்நியர்களுக்காக நடத்தப்படும் வாக்குகளுக்காக குடியுரிமை எனக் கூறப்படும் திட்டத்தை விசாரிக்க உதவும் வகையில் அந்த ஆர்சிஐ-யின் பணிகளை விரிவுபடுத்துமாறும் நுருல் நஜிப்பைக் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் ஆர்சிஐ சபாவில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை மட்டும் ஆய்வு செய்வதை நாங்கள் விரும்பவில்லை. மலேசியா முழுவதிலும் உள்ள சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் பற்றி அது விசாரிக்க வேண்டும். எத்தகைய பொறுப்புணர்வும் இல்லாமல் குடியுரிமை ‘விற்கப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என்றார் அவர்.

TAGS: