புரோட்டோன் பற்றிய குறைகூறல் உண்மை என்று நிரூபணமாயிற்று

உங்கள் கருத்து: “புரோட்டோன் அதன் சொந்த காலில் நிற்பதற்குப் போதுமான அவகாசம் கொடுத்தாயிற்று.புரோட்டோனை வாழவைக்கும் கடப்பாடு எனக்கில்லை.மற்ற மலேசியர்களுக்கும் அக்கடப்பாடு இல்லை”.

வாகனத் தொழில் பிகேஆரின் வாகனக் கொள்கையை ஆதரிக்கிறது

ஸ்டார்: இறக்குமதி கார்களுக்கான சுங்க,கலால் வரிகளைக் குறைத்து உள்நாட்டு கார்களுக்குக்  கூடுதல் போட்டியை உருவாக்கும் பிகேஆரின் வாகனக் கொள்கைக்கு வரவேற்பு கூறும் கார் விற்பனையாளர்களைப் பாராட்டுகிறோம்.

இது, கடந்த காலக் கொள்கையால் விளைந்த தவறுகளைச் சரிசெய்ய வேண்டியிருப்பதால் குறுகிய காலத்துக்கு சில இடர்களைக் கொடுக்கலாம்.ஆனால், காலப்போக்கில் இதனால் நாட்டுக்கு நன்மையே.

இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட திட்டங்களில் மிகுந்த செலவை உள்ளடக்கியது  இந்தப் புரோட்டோன் திட்டமே.போட்டிடும் திறனற்ற அத்தொழிலின் சுமையை நாடு மொத்தமும் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று.

மக்கள் படும் துன்பத்துக்குப் புதிய அரசாங்கம் வைக்க வேண்டும் முற்றுப்புள்ளி. 

ஸ்வைபெண்டர்: அதுதான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் கொள்கைக்கு நாம் கொடுக்கும் விலை.அவர், புரோட்டோன் திட்டம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக கார்களின் விலையைச் செயற்கையாக உயர்த்தினார்.

இதை மாற்றியாக ஆக வேண்டும்.மாற்றம் துன்பம்தரும் என்றாலும் ஏற்கத்தான் வேண்டும்.

கேஜென்:கார்களின் விலைவீக்கம்-அதுதான் மகாதிர் விட்டுச் சென்ற சொத்து.சிறு மக்கள்தொகை கொண்ட நம் நாட்டுக்கு தேசிய கார் தயாரிப்புத் தொழில் தேவையில்லை என்று அன்றே அறிவுரை சொன்னார்கள்.அவர் கேட்கவில்லை.

அதனால் நம் வாகனத் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்ட சுமையும் அளப்பெரியது.குறைகூறியவர்கள் சொன்னது உண்மையாயிற்று-புரோட்டோனால் உலகச் சந்தையில் போட்டியிட முடியவில்லை.உயிர்வாழ உள்நாட்டுச் சந்தையின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.

போதுமடா சாமி.நடப்பு அரசை விரட்டி அடித்தால்தான் விலை குறைந்த கார்களை வாங்க முடியும் என்றால், அப்படியே ஆகட்டும்.

டாக்: கலால் வரி நீக்கப்பட்டால் கார் விலை குறையுமா என்றெல்லாம் அம்னோ கவலைப்படவில்லை.அதன் கவலை எல்லாம், ஏபிகளை(அங்கீகரிக்கப்பட்ட உரிமம்)வைத்து பிழைத்துக்கொண்டிருக்கும் அம்னோபுத்ராக்கள் அதன்பின் தாக்குப்பிடிப்பார்களா என்பதுதான்.

ஓடின்: நீண்டகால நன்மையை நினைப்பவர்கள் நிச்சயமாக பக்காத்தான் கொள்கையை எதிர்க்க மாட்டார்கள்.புரோட்டோனை வாழ வைக்க, சாதாரண மக்களைக் கசக்கிப் பிழிவது நியாயமல்ல.சுய காலில் நிற்க முடியாவிட்டால் அது புதையுண்டு போகட்டும்.

பீரங்கி: நான் இன்னமும் என் காருக்கான கடனைக் கட்டி வருகிறேன்.கட்டி முடிக்க மேலும் நான்கு ஆண்டுகள் ஆகும்.

பக்காத்தான் கொள்கையால் என் காரின் மதிப்பு குறையும்.ஆனாலும், நான் கவலைப்படவில்லை.நீண்ட காலப் போக்கில் அது எல்லாருக்குமே- நம் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்க்குக் கூட நன்மையாகத்தான் இருக்கும்.

தும் ஜோ கியோங்: புரோட்டோன் வாழ வேண்டும் என்பதற்காக நான் ஏன் மற்ற கார்களுக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டும்?கார் உற்பத்தியில் தென் கொரியர்கள் எப்படி நம்மை முந்திக்கொண்டு சென்றுவிட்டார்கள், பாருங்கள்.

புரோட்டோன் அதன் சொந்த காலில் நிற்பதற்குப் போதுமான அவகாசம் கொடுத்தாயிற்று.புரோட்டோனை வாழவைக்கும் கடப்பாடு எனக்கில்லை.மற்ற மலேசியர்களுக்கும் அக்கடப்பாடு இல்லை.

கார்களின் விலை காலப்போக்கில் குறைவது இயல்பே.ஒரு புதிய காரை வாங்கி ஓட்டத்தொடங்கியதுமே அதன் விலை 10இலிருந்து 30விழுக்காடுவரை குறைந்து விடுகிறது.அதனால் காரின் மதிப்புக் குறைவது ஒரு விவகாரமே அல்ல.

 

 

TAGS: