மந்திரி புசார்: சிலாங்கூரில் தண்ணீர் நெருக்கடி இல்லை என்பதை சபாஷ் ஒப்புக் கொண்டுள்ளது

சிலாங்கூர் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் கண்காணிப்புக் குழுவுக்கு விளக்கமளித்த சபாஷ் அதிகாரிகள் அந்த மாநிலம் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இஸ்மாயில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அபாயகரமான இரண்டு விழுக்காடு உபரியுடன் நீர் நெருக்கடியை அந்த மாநிலம் எதிர்நோக்குவதாக சபாஷ் அறிவித்திருந்தது.

சிலாங்கூரிலுள்ள 35 நீர் தேக்கப் பகுதிகள் அன்றாடம் மொத்தம் 4,960 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஆற்றலை பெற்றுள்ளதை அந்தக் குழுவின் பூர்வாங்க ஆய்வுகள் காட்டுவதாக மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் அப்துல் காலித் சொன்னார்.

அந்த அளவு சபாஷ் இப்போது நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்து வரும் தண்ணீரைக் காட்டிலும் 14 விழுக்காடு அல்லது 598 மில்லியன் லிட்டர் அதிகமாகும்.

“அவர்கள் அந்த புள்ளிவிவரங்களை ஒப்புக் கொண்டார்கள். சபாஷ் அதிகாரிகள் கூட்டம் நடந்த அறையில் இருந்தார்கள்.”

“இருவர் மட்டுமே வரவில்லை- மாதம் ஒன்றுக்கு 400,000  ரிங்கிட் சம்பளம் கொடுக்கும் ஒருவர், தலைமை நிர்வாக அதிகாரி ருஸ்லான் ஹசான் ஆகியோரே அவர்கள். எல்லா உயர் நிலை நிபுணர்களும் வந்தார்கள்,” என சபாஷ் நிர்வாகத் தலைவர் ரோஸாலி இஸ்மாயில் பற்றி அப்துல் காலித் கிண்டலாகக் கூறினார்.

சிலாங்கூரில் தண்ணீர் சேமிப்பு கடுமையான நிலையில் இருப்பதால் சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகியவற்றின் சில பகுதிகளில் நீர் பங்கீட்டை அமலாக்கும் யோசனையை சபாஷ் கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து சபாஷ், நீர் நெருக்கடியை “உருவாக்கியுள்ளதாக” குற்றம் சாட்டியதுடன் அந்த நிறுவனத்துக்குள் தலையிடுவதற்கான தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

சிலாங்கூரில் சில பகுதிகள் நீர் விநியாகத் தடையை எதிர்நோக்குவதை அப்துல் காலித் ஒப்புக் கொண்டார். அதற்கு சபாஷ் நிறுவனத்துக்கு விநியோக ஆற்றல் குறைவாக இருப்பதே காரணம் என்றார் அவர்.

“செராஸ், பெட்டாலிங் ஜெயா போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்களுடைய தன்மை காரணமாக தண்ணீரை பம்ப் ( pump ) செய்ய வேண்டியுள்ளது. அப்போது சில இடங்களில் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டு அதிகமாக தண்ணீர் கிடைக்காமல் போகின்றது… அந்தப் பகுதிகளுக்கு தண்ணீரை மாற்றி விடுவதற்கான குழாய்களை பொருத்துவதின் மூலம் கூடுதல் தண்ணீரைக் கொண்டு செல்ல  வேண்டும்.”

அந்த “நீர் நெருக்கடி” பக்காத்தான் தலைமையிலான மாநில அரசாங்கத்தை அரசியல் ரீதியில் காயப்படுத்தியுள்ளது என்பதை அப்துல் காலித் ஒப்புக் கொண்டார். “வயதான மாது ஒருவர் தண்ணீர் வாளியைக் கொண்டு செல்வது மக்களுடைய தேவைகளை சிலாங்கூர் அரசாங்கம் உணராமல் இருக்கிறது என ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நான் அதனைத் தீர்க்க முயன்று வருகின்றேன்,” என்றார் காலித்.

 

TAGS: