செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ‘க்யூரியாசிட்டி’ விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது.
பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள க்யூரியாசிட்டி அந்த கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கலத்தின் வேகம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியவுடன் அதன் ஈர்ப்பு விசை காரணமாக அதிகரித்தது. இருப்பினும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மிக மிக பத்திரமாக தரையிறக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஐஸ் கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்ப நிலை மைனஸ் 12 செல்சியல் ஆகும்.
கிட்டத்தட்ட 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன.
2030ம் ஆண்டில் இந்த கிரகத்துக்கு மனிதரை அனுப்ப வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றைய விண்கல சோதனை நாஸாவுக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
க்யூரியாசிட்டி விண்கலம் ஒரு astrobiology கலமாகும். இதன் முக்கியப் பணி செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் உள்ளனவா என்பதை சோதனையிடுவதே.
லேசர் துப்பாக்கிகள், ரசாயன, உயிரியல் ஆய்வுக் கருவிகள், பெரும் சக்தி படைத்த டெலஸ்கோப் உள்ளிட்டவையோடு செவ்வாயில் தரையிறங்கிய இந்த விண்கலத்தை கணினி கட்டுப்பாட்டிலான தானியங்கி தான் இயக்கியது.
செவ்வாய் கிரகத்துக்குள் நுழையும்போது இதன் வேகம் 20,921 கி.மீயாக இருந்தது. இது ஒலியின் வேகத்தை விட 17 மடங்கு அதிகம். இந்த பயங்கரமான வேகத்தில் கிரகத்துக்குள் நுழைந்த க்யூரியாட்சிட்டி கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் தரைப் பகுதியை நெருங்கியது.
இதையடுத்து அதன் பாராசூட்களும் ராக்கெட்களும் செயல்பட்டு அதன் வேகத்தை மட்டுப்படுத்தின. இதைத் தொடர்ந்து விண்கலம் தரையைத் தொடும் முன் அதிலுள்ள ஒரு கிரேன் முதலில் வெளியே எட்டிப் பார்த்தது. பின்னர் அந்த கிரேனிலிருந்து நைலான் கயிறுகள் மூலம் க்யூரியாசிட்டி விண்கலம் தரையில் பத்திரமாக இறங்கியது.
இதையடுத்து கிரேனில் உள்ள ராக்கெட்டுகள் செயல்பட்டு அதை விண்கலத்தில் இருந்து சில கி.மீ. தூரத்தில் தூக்கி எறிந்தன.
இதையெல்லாமே விண்கலத்தின் கம்ப்யூட்டர்களில் உள்ள புரோகிராம்கள் செயல்படுத்தின. கிரகத்துக்குள் நுழைந்த 7 நிமிடங்களில் இது எல்லாம் நடந்து முடிந்து க்யூரியாசிட்டி தரையில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
விண்கலத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தைத் திறப்பது. பாராசூட்டை திறப்பது, கிரேனை செயல்பட வைப்பது ஆகிய பணிகளை 79 சிறிய வெடிகள் (pyrotechnic detonations) செய்தன.
க்யூரியாசிட்டி பத்திரமாக தரையிறங்கியுள்ளதை, அதை செவ்வாய் கிரகத்தை ஏற்கனவே சுற்றி வரும் நாஸாவின் மார்ஸ் ஒடிஸி செயற்கைக் கோளுக்குத் தெரிவித்தது. பின்னர் அங்கிருந்து பூமிக்கு அடுத்த சில வினாடிகளில் தகவல் வந்து சேர்ந்தது.
இந்த அரிய சாதனையை நாசாவில் கூடியிருந்த 1,400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உற்சாகக் கூக்குரலிட்டு வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலேயே கியூரியாசிட்டிதான் மிகவும் துணிச்சலானது என்றும் நாசா விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கூறினர்.
க்யூரியாசிட்டி விண்கலம் நடத்தும் சோதனைகள், அதன் முடிவுகளை எல்லாம் ஒடிஸி தான் முதலில் அறிந்து, அதை பூமிக்கு ஒலி-ஒளிபரப்பு செய்யும்.
நாஸாவில் ஒரு பழக்கம் உண்டு. நல்ல காரியம் நடக்க நாம் தேங்காய் உடைத்து, சாமி கும்பிடுவது மாதிரி நாஸாவின் விண் திட்டங்கள் அதன் இலக்கை அடையும் நாளில் வறுக்கப்பட்ட நிலக்கடலைகள் கொண்ட டப்பாக்களை உடைப்பர். இன்றும் பல டப்பாக்கள் உடைக்கப்பட்டன.