பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை பற்றிய “மார்ச் 8” என்ற புத்தகத்திற்கு அரசாங்கம் விதித்த தடையை ரத்துச் செய்வதற்கு அதன் ஆசிரியர் கா. ஆறுமுகம் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
மார்ச் 8 என்னும் தலைப்பில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தக்கத்தை உள்துறை துணை அமைச்சர் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதியில் தடை செய்தார். அந்தப் புத்தகத்தை விநியோகம் செய்வது உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்று அந்தத் துணை அமைச்சர் தமது முடிவுக்குக் காரணம் கூறியிருந்தார்.
அந்த தடையை நீக்க வழக்குரைஞராக மாறிய பொறியியலாளர் கா. ஆறுமுகம் செய்த மனுவை ஜனவரி 25, 2010-இல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அவர் மேற்கொண்ட மேல் முறையீடு இன்று புத்ரஜெயாவில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்பாண்டி அலி தலைமையில் மூன்று நீதிபதிகள் செவிமடுத்தனர்.
அந்தப் புத்தகம் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கிறது என்னும் காரணத்தின் அடிப்படையில் அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கும் விற்பதற்கும் விநியோகிப்பதற்கும் அரசாங்கம் தடை விதித்தது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு “வாசகர்களின் மனதில் குறிப்பாக இந்திய சமூகத்தினரின் மனதில் நஞ்சைக் கலந்து விடும்” என்னும் போலீஸ் மற்றும் அமைச்சின் கருத்துக்களை பரிசீலித்த பின்னர் அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கும் அச்சிடுவதற்கும் தடை விதிப்பதற்கு அமைச்சருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அந்த துணை அமைச்சருக்கு முழு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபது முகமட் அரீப் இதற்கு முன்பு தீர்ப்புபளித்திருந்தார்.
அந்தப் புத்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைக்கு நியாயமற்றது, காரணம் இல்லாதது என்று ஆறுமுகத்தின் வழக்குரைஞர் எட்மண்ட் போன் வாதாடினார். அந்தப் புத்தகம் தடை செய்யப்படுவதற்கு முன்னர் மூவாயிரம் பிரதிகளுக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டிருப்பதால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அது தீங்கை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரத்தை கொடுக்க உள்துறை துணை அமைச்சர் தவறி விட்டதாகவும் அவர் சொன்னார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆறுமுகம் இந்தத் தீர்ப்பை தொடர்ந்து மேல்முறையீட்டுக்காக கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனது வழக்குரைஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.
“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறிவிட்டதை இப்புத்தகம் முழுமையாக வெளிப்படுத்துகிறது என்ற எனது நிலையை இன்னமும் வலியுறுத்துகிறேன்”, என்று மேலும் கூறிய அவர் இது போன்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அமைவுகளும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார் சுவாராம் என்ற மனித உரிமை இயக்கத்தின் தலைவருமான கா. ஆறுமுகம்.