மெர்டேகாவை எந்தக் கருப்பொருளில் கொண்டாடலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பிஎன்னுக்குத்தான் உண்டு. ஏனென்றால் அதனை நிறுவிய அம்னோ, மசீச,மஇகா கட்சியினர்தான் சுதந்திரத்துக்காக போராடி அதைப் பெற்றுத் தந்தார்கள் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ்.
“1951-இல் அமைந்த கட்சி என்றாலும் பாஸ் அதற்காகப் போராடவில்லை.டிஏபி 1969-இல்தான் உருவானது. எனவே, கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை அம்மூன்று கட்சிகளுக்கும்தான் உண்டு”, என்றார்.
“’Janji ditepati’ என்னும் கருப்பொருள் பிரிவினையைக் காண்பிக்கவில்லை.பிஎன் அரசாங்கம் சுதந்திரம் தொடங்கி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது”.
மாற்றுக்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டனர்.அதனால்தான் கருப்பொருள் குறைபாடுள்ளதாக அலறுகிறார்கள் என்று அந்த பாடாங் ரெங்காஸ் எம்பி கூறினார்.
22ஆண்டுகளாக ஹூடுட் சட்டம் பற்றிப் பேசிவரும் பாஸ் அதனை அமல்படுத்தத் தவறியது அவற்றுள் ஒன்று.
“பிஎன்னில் உள்ள நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.அதனால்தான் (கருப்பொருள்)எங்களுக்கு ஏற்புடையதாக உள்ளது”, என்று நஸ்ரி கூறினார்.