ஹனிப் வழக்குரைஞர் மன்றத்தையும் அம்பிகாவையும் சந்திக்க விரும்புகிறார்

கடந்த ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சுயேட்சை ஆலோசனைக் குழு வழக்குரைஞர் மன்றம் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்து அன்று என்ன நடந்தது என்று விவாதிப்பதற்காக சந்திப்புக்கான நேரம் கேட்டு ஒரு கடிதத்தை இன்று அனுப்பியுள்ளது.

அன்று என்ன நடந்தது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக இம்முயற்சி எடுக்கப்படுகிறது என்று அந்த சுயேட்சை ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹனிப் ஒமார் கூறினார்.

“அவர்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் எங்களைச் சந்திக்கலாம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் முக்கியமான பங்கேற்பாளர்கள்.

“இல்லையென்றால், எங்களுடைய அறிக்கை முழுமையானதாக இருக்காது” என்று அக்குழுவின் 10 ஆவது கூட்டத்திற்குப் பின்னர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் ஹனிப் கூறினார்.