குற்றச் செயல்கள்- நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்

“போலீசார் மிகச் சிறந்த அறிவுரையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்- நாம் வழிப்பறி கொள்ளையர்களை தவிர்க்க விரும்பினால் பைகளைக் கொண்டு செல்ல வேண்டாம்.”

எங்கெங்கு நோக்கினும் குற்றச் செயல்களே: மலேசியாகினி ஊழியர்களுடைய அனுபவங்கள்

ஜாஸ்பர்: குற்றச் செயல்கள் குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக அரச மலேசியப் போலீஸ் படை சொல்வது சரியே. அந்தப் புள்ளி விவரங்களுக்கான ஆதாரம் குற்றச் செயல்கள் பற்றிய புகார்கள் ஆகும்.

ஆனால் பலர் இப்போது புகார் செய்வதே இல்லை. ஏனெனில்

1) குற்றச் செயல் கண்டு பிடிக்கப்படப் போவதில்லை என உங்களுக்குத் தெரியும் வேளையில் அது மிகவும் சிரமமான விஷயமாகும்.

2) புகார் செய்வதிலிருந்து போலீசாரே உங்களைத் தடுக்கின்றனர் (வேலைச் சுமையைக் குறைப்பதும் சிறந்த கேபிஐ என்ற முக்கிய அடைவு நிலைக் குறியீட்டைப் பெறுவதும் அதன் நோக்கமாகும்)

குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நான் திரட்டிய தகவல்கள் அடிப்படையில் அந்தக் காரணங்களைக் கூறியுள்ளேன்.

ஆட்சி மாற்றம் ஒரு தீர்வாக இருந்தாலும் பொது மக்கள் புகார் செய்வதும் அவசியமாகும். என் கருத்துக்களை ஆதரிக்கின்றவர்கள் அல்லது எதிர்க்கின்றவர்களுடைய எண்ணங்களை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

உப்பா: போலீசார் மிகச் சிறந்த அறிவுரையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்- நாம் வழிப்பறி கொள்ளையர்களை தவிர்க்க விரும்பினால் பைகளைக் கொண்டு செல்ல வேண்டாம். ஆகவே உங்கள் கார்களை யாரும் உடைக்கக் கூடாது என  விரும்பினால் கார்களை ஒட்டக் கூடாது. அப்படித் தானே ?

ஊழல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் அவற்றை ஒழித்து விடுங்கள். ஊழலிலிருந்து நாம் விடுபட்டு விடுவோம்.

போடே: அந்தக் கொள்ளையர்கள் கூடிய வரை ‘மிக முக்கியமான மனிதர்களையும்’ (VIPs) அம்னோ/பிஎன் அரசியல்வாதிகளையும் குறி வைத்து சாதாரண மக்களை விட்டு விட வேண்டும். அவ்வாறு குறி வைப்பது குண்டர்களுக்கு ஆதாயகரமாகவும் இருக்கும்.

நமது குற்றச் செயல் புள்ளி விவரங்களை வெளியிடும் போது நாம் வெட்கப்படுவதே இல்லை. பல குற்றச் செயல்கள் பற்றிப் புகார் செய்யப்படுவதே இல்லை. போலீசாரிடம் சொல்வதால் தங்களது நேரமே விரயமாகும் என்பது பாதிக்கப்பட்ட பலருக்குத் தெரியும். நாம் இப்போது அந்த நிலைக்குத் தான் வந்துள்ளோம்.

எச்பேசில்: அரசாங்க மாற்றமே ஒரே தீர்வாகும். போலீஸ் படையை சரியான பாதையில் வைப்பதற்கு பக்காத்தான் ராக்யாட்டுக்கு மட்டுமே வலிமை உண்டு. திறமையற்ற ஊழியர்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும்.

அதே வேளையில் மலேசியர்களும் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். காரணம் போலீசார் கடுமையாக சட்டத்தை அமலாக்கும் போது போக்குவரத்துக் குற்றங்களுக்காக அதிகமான குற்றப்பதிவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

மலேசியா முழுவதும் சாலைப் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமலாக்கப்பட வேண்டும். அமலாக்கம் மட்டுமே குற்றச் செயல்களை குறைக்கும்.

வீடு: நான் தென் கொரியத் தலைநகர் சோல் சென்றிருந்த போது ஓட்டுநர் எங்களை மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். நான் என் ஐ பாட்-ஐ ( iPad ) கொண்டு செல்ல விரும்பினேன். ஆனால் காரில் அதனை வைத்து விட்டு வருமாறு ஓட்டுநர் கூறினார்.

அது பாதுகாப்பானதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒட்டுநர் எனக்கு உறுதி அளித்தார். உண்மையில் எந்தப் பிரச்னையும் எழவில்லை.

பிஎம்ஜேஆர்: 12வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் முழு பிஎன் -னும் பாலர் பள்ளிக்குத் திரும்பச் சென்று ‘எண்ணம்’ என்ற ஒரு வார்த்தையை கற்றுக் கொண்டு வந்துள்ளனர். அப்போது தொடக்கம் பிஎன் அமைச்சரவை அந்த எண்ணங்களை நிர்வாகம் செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றது.

அந்தக் கட்டுரையில் கொள்ளைகளையும் திருட்டுக்களையும் அறிவித்த மலேசியாகினி ஊழியர்கள் உண்மையில் அந்த குற்றச் செயல்களினால் பாதிக்கப்படவில்லை. பிஎன் கருத்துப்படி அவர்கள் அந்தக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்ற எண்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியாயமானவன்: ஏதோ குளறுபடி உள்ளது. மலேசியாகினி ஊழியர்கள் குற்றச் செயல்களுக்கு இலக்காக வேண்டும். அதுவும் ஒரு மாதத்திற்கு இடையில் ? அந்தத் திருடர்கள் ‘கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களா ?” எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஏடிஜே: அது முட்டாள்தனமானது. குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டதால் தங்கள் அனுபவங்களை  வாசகர்களுடன் மலேசியாகினி ஊழியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். யாருக்கும் அந்த அந்த நிலை ஏற்படலாம். ஏதாவது செய்ய வேண்டும். நாம் குறி வைக்கப்படுவது போன்ற கதைகள் தேவை இல்லை. நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்.

எஸ்ஏ டாம்ஸ்: அந்தக் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ளது மலேசியாகினி ஊழியர்கள்  என்பதே பிரச்னை. நீங்கள் ஒரு தான் ஸ்ரீ-யாகவோ அல்லது அம்னோவைச் சேர்ந்தவராகவோ இருந்தால் குற்றம் நிகழ்வதற்கு முன்னரே போலீசார் அங்கு இருப்பார்கள். அவர்கள் அவ்வளவு திறமையானவர்கள்.

அர்ச்சன்: மலேசியாவுக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வர நடத்தப்பட்ட நாடகம் அந்தச் சம்பவங்கள் என ஹிஷாமுடின் சொல்வார். அவை ஆங்காங்கே நிகழும் சம்பவங்கள் எனப் போலீஸ் கூறும்.

அது தவறாக கையாளப்பட்ட எண்ணம் என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா சொல்வார்.

இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த கருத்தை இளைஞர் விளையாட்டு அமைச்சர் கூறுவார்.

அவர் சொல்கிறார், “யார் அவர்களை அங்கே இருக்கச் சொன்னது. அது யாருக்கும் நிகழலாம்.”

 

 

TAGS: