சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை எதிர்ப்பது நியாயமற்றது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.
அந்த எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் வருணித்தார்.
சபாவில் குடியேற்றக்காரர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்ததாலும் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாஹாசா மலேசியாவை சரளமாகப் பயன்படுத்துவதாலும் அந்த மாநிலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் நியாயமானதே என்று அவர் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் தங்கியிருந்த காலம், தேசிய மொழியில் பாண்டித்தியம் பெற்றது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் அவர்களுக்கு குடியுரிமை கிடைத்தது,” என்றார் அவர்.
அதனை ஒப்பிட்ட மகாதீர், மலேசியாவில் நீண்ட காலம் வாழ்ந்து பாஹாசா மலேசியாவில் சரளமாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்குக் கூட குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்
“அந்த எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்த சபா குடியேற்றக்காரர்களை ஏன் குடி மக்களாக ஏற்றுக் கொள்ளக் கூடாது ? அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு தெரிவிக்கப்படும் ஆட்சேபங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை,” என்றார் அந்த முன்னாள் பிரதமர்.
இவ்வார இறுதியில் சபாவுக்குச் செல்லவிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சபாவில் குடிமக்களாக மாற்றப்பட்டது மீது அமைக்கப்படும் அரச விசாரணை வாரியத்தின் பணிகளை இறுதியில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படும் வேளையில் மகாதீருடைய வலைப்பதிவு வெளியாகியுள்ளது.
1990ம் ஆண்டுகளில் அரசியல் காரணங்களுக்காக சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்குக் குடியுரிமை வழங்கிய திட்டம் எனக் கூறப்பட்டுள்ள அடையாளக் கார்டு திட்டத்துடன் ( Project IC ) உடன் மகாதீரும் பிணைக்கப்பட்டு பேசப்பட்டு வருகின்றார்.
2002ம் ஆண்டு 200,000க்கும் மேற்பட்ட அந்நியர்கள் எந்த விதமான ஆவணமும் இல்லாமல் சபாவிலிருந்து வெளியேறியதாக தேசிய மனித உரிமை மன்ற வட்டமேசை மாநாடு ஒன்றில் Parti Bersatu Sabah சமர்பித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டது.
அவர்கள் வேறு பெயர்களில் சட்டப்பூர்வமான ஆவணங்களுடன் திரும்பினர் என்றும் அவை காலாவதியானதுடன் அவர்கள் அவற்றை அழித்து விட்டனர் என்றும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்த அந்தக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டாக்டர் சொங் எங் லியோங் கூறினார்.
அந்த அடையாளக் கார்டு திட்டம் பற்றித் தமக்கு ஏதும் தெரியாது என்றும் மகாதீர் கூறிக் கொண்டுள்ளார். அந்த விவகாரத்தில் தாம் ஒதுக்கப்பட்டிருந்ததாக அப்போது துணைப் பிரதமராக இருந்த இப்போதைய பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.