மசீச:பக்காத்தான் மெர்டேகா வரலாற்றைப் புறக்கணிக்கிறது

நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் வெவ்வேறு கருப்பொருளில் மெர்டேகா நாள் கொண்டாடப்படுவது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் கூட்டணியின் பங்களிப்பைக் கேலி  செய்யும் முயற்சியாகும் என மசீச கூறியுள்ளது.

மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங், அம்னோ, மசீச,மஇகா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இனவேறுபாட்டை ஒதுக்கிவைத்து பொதுஇலக்கான சுதந்திரத்தைப் பெறப் போராடி இரத்தம் சிந்தாமல் அதைப் பெற்றுத்தந்தது என்றார்.

கூட்டணி, பிரிட்டிஷாருடன் அமைதியான  முறையில் பேச்சு நடத்தியதன்வழி வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மலாயாவை ஆள்வது சாத்தியமே என்பதையும் நிரூபித்தது.

“(நான்கு கருப்பொருள்கள்) அந்தப் புனிதமான வரலாற்றையும் நமது இறையாண்மையையும் கேலி செய்வதாக உள்ளது”, என்று வீ இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

பக்காத்தான் தலைமை “Sebangsa, Senegara, Sejiwa” (ஒரே தேசியம், ஒரே நாடு,ஒரே மூச்சு) என்ற கருப்பொருளை அறிவித்திருந்தாலும் பினாங்கு, கெடா, கிளந்தான் ஆகியவை வேறு கருப்பொருள்களில் தேசிய நாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளன.

சிலாங்கூர் மட்டுமே பக்காத்தான் கருப்பொருளில் தேசிய நாளைக் கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளது.

போட்டிவைத்து கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துவிட்டு இப்போது மூன்று மாநிலங்கள் வெவ்வேறு கருப்பொருளில் தேசிய நாளைக் கொண்டாடுவது ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஏளனம் செய்வதுபோல் உள்ளது என்று வீ குறிப்பிட்டார்.

அது, பக்காத்தானில் ஒற்றுமை இல்லை, ஒத்துழைப்பு இல்லை, தன்னலம் போற்றும் தன்மையே உண்டு என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.

“மக்களுக்கு எப்படிப்பட்ட ஒற்றுமையைக் காண்பிக்கிறார்கள்?அச்சொல்லின் பொருளாவது அவர்களுக்குத் தெரியுமா?”, என்றவர் வினவினார்.

இன்னொரு நிலவரத்தில், மசீச இளைஞர் கல்விப் பிரிவுத் தலைவர் சொங் சின் வூன், கிளந்தான் தேர்வுசெய்துள்ள Menerajui Perubahan (மாற்றத்தின் முன்னோடி) என்ற கருப்பொருளைக் குறைகூறினார்.22 ஆண்டுகள் பாஸ் ஆட்சியில் இருந்து வரும் அம்மாநிலத்தில் மாற்றங்கள் என்று காண்பிக்க ஒன்றுமில்லை.

“காண்பிப்பதென்றால், மக்களுக்குத் தூய்மையான நீரை வழங்க முடியாதிருப்பதையும், வேலையில்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் குறைவான அந்நிய நேரடி முதலீடுகளையும் ஊராட்சி மன்றங்கள் அவற்றின் விதிமுறைகளின் மூலமாக அவர்களின் சமய நம்பிக்கையை முஸ்லிம்-அல்லாதார்மீது திணிப்பதையும்தான் காண்பிக்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.

பக்காத்தான் கட்சிகள் ஒன்றுடன் மற்றொன்று ஒத்துழைக்க முடியாதிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொங் குறிப்பிட்டார்.புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் ஆசை மட்டுமே அவற்றை ஒன்றாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது.