மெர்டேகா கொண்டாட்டத்துக்கு சொந்த கருப்பொருளைக் கொண்டிருக்கப் போவதாக அறிவித்திருந்த பினாங்கு, இன்று ஒரு பல்டி அடித்து பக்காத்தான் தலைமைத்துவம் தீர்மானித்துள்ள ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற கருப்பொருளையே பின்பற்றப் போவதாகக் கூறியுள்ளது.
அதன் முந்தைய அறிவிப்பு பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற வில்லை என்பதுடன் பிஎன்னின் கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்கானது.
இம்முடிவு பக்காத்தானின் “குரல் ஒன்றே” என்பதை நிரூபிப்பதாக என பினாங்கு துணை முதல்வர் I மன்சூர் ஒஸ்மான் கூறினார்.
“மற்ற பக்காத்தான் மாநிலங்களைப்போல் பினாங்கும் பக்காத்தான் தலைமையின் முடிவை மதித்து ஒத்துழைப்பு உணர்வை நிலைநாட்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“பக்காத்தான் தலைமை கருப்பொருளை முடிவு செய்யுமுன்னர் பினாங்கு ஒரு கருப்பொருளை முடிவு செய்து வைத்திருந்தது”, என்றவர் விளக்கினார்.
“இப்போது பக்காத்தான் தலைமை ‘ஒரே நாடு ஒரே மூச்சு’ என்ற கருப்பொருளைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதால், நாங்களும் அதைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டிருக்கிறோம்”.
இம்முடிவு பக்காத்தான் கூட்டணியில் “மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கப்படுவதை” நிரூபிக்கிறது என்று கூறிய மன்சூர், ஆனால் முடிவு செய்யப்பட்ட பின்னர் உறுப்புக் கட்சிகள் மக்களுக்காக ஒரே குரலில் ஒன்றிணையும் என்றார்.
புத்ரா ஜெயாவின் ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) கருப்பொருளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ‘ஒரே நாடு ஒரே மூச்சு’ கருப்பொருள் ஆகஸ்ட் 1-இல் உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் கருப்பொருள், பிஎன் தேர்தல் பரப்புரைக்கும் பயன்படுத்தப்படுவதால் கடுமையான குறைகூறலுக்கு இலக்கானது.