ஹுசாம்: கிளந்தானில் எண்ணெய் இல்லை என்றால் குழு ஏன்?

கிளந்தானில் எண்ணெய் வளங்கள் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே அறிவித்து விட்டதால் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை கூட்டரசு அரசாங்கம் அமைத்துள்ளது குறித்து அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி எழுப்பியுள்ளார்.

எண்ணெய் உரிமப் பணத்துக்கான கோரிக்கையை கூட்டரசு அரசாங்கம் 2009ம் ஆண்டு முற்றாக நிராகரித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.  ஹுசாம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் பேசினார்.

“2009ம் ஆண்டு மே மாதம் அது கிளந்தானில் பெட்ரோலியம் இருப்பதை 100 விழுக்காடு மறுத்துள்ளது. கிளந்தானுக்கு உரிமப் பணத்தைப் பெறுவதற்குத் தகுதி இல்லை என்றும் கூறியது.”

“ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கிளந்தான் மக்களுடைய வல்லமைக்கு பிரதமர் அடி பணிந்துள்ளார்,” என ஹுசாம் சொன்னார்.

கிளந்தானுக்கு எண்ணெய் உரிமப்பணத்துக்குப் பதில் wang ehsan எனப்படும் கருணை நிதியை அந்த மாநிலத்துக்குக் கூட்டரசு அரசாங்கம் கொடுக்கும் என்றும் நஜிப் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார்.

“இப்போது கிளந்தான், திரங்கானு கடற்கரைக்கு அப்பால் பெட்ரோலிய உற்பத்தி ஏதுமில்லை. ஆகவே சட்ட ரீதியாகப் பார்த்தால் கிளந்தான் மாநில அரசாங்கத்துக்கும் திரங்கானுவுக்கும் எண்ணெய் உரிமப் பணத்தைப் பெறுவதற்குத் தகுதி இருக்காது,” என நஜிப் அப்போது தேவான் ராக்யாட்டில் கூறினார்.

கடற்கரையிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவுக்குள் உள்ள நீர்ப் பகுதியே மாநிலக் கடற்பகுதி என 1969ம் ஆண்டு அவசர காலச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம் என்றும் நஜிப் அப்போது  வாதாடினார்.

 

TAGS: