விசாரணையின்போது சித்திரவதை செய்ததாக போலீஸ்மீது வழக்கு

மூன்றாண்டுகளுக்குமுன் பிரபாகர் பாலகிருஷ்ணா, செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு துன்பத்தை அனுபவிப்போம் என்பதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்.

2008 டிசம்பர் 23-இல் போலீசாரால் அவரும் இன்னொருவரான சாலமன் ராஜ் சந்திரனும் பிடித்துச் செல்லப்பட்டனர். அது ஒரு வழக்கமான  போலீஸ் சோதனைதான் விரைவில் முடிந்துவிடும் என்றவர் நினைத்தார்.

ஆனால் அடுத்த சில நாள் அனுபவம், அவருக்குத் தீராத அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தி விட்டது.. இன்றளவும் அதை மறக்க முடியவில்லை. நினைத்து நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.

ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பிரபாகரும் சாலமனும் விடுவிக்கப்பட்டனர்- உடல் முழுக்க காயங்களுடன். அவர்கள் உடல் முழுவதும் கொதிநீரில் முக்கி எடுத்தது போலிருந்தது-போலீஸ் அதிகாரிகள் விசாரணையின்போது கொதிக்கும் நீரை ஊற்றியதன்  விளைவு என்றவர்கள் கூறினர்.

“என்னைக் கைது செய்தபோது சந்தேகத்தின்பேரில் பிடித்துச் செல்வதாகக் கூறினார்கள். சிறுநீர் சோதனைக்காகக் கொண்டு செல்கிறார்கள் என்று நினைத்தேன்”, என்றார் பிரபாகர்.

“பிரிக்பீல்ட்ஸ் (போலீஸ் நிலையம்) சென்றதும், அடிக்கத் தொடங்கினார்கள். ஏன் என்று கேட்டதற்கு பல குற்றங்களைக் கூறி அவற்றை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள், நான் மறுத்தேன்”.

பிரபாகர் இன்று கோலாலம்பூர் ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகத்து வந்திருந்தார். அவரும் சாலமனும் தங்களைச் சித்திரவதை செய்ததாக போலீஸ் அதிகாரிகள் எண்மர்மீதும் அரசாங்கத்தின்மீதும் கூட்டாக வழக்கு தொடுக்கின்றனர்.

கொதிக்கும் நீரை ஊற்றியதைத் தவிர்த்து திரும்பத் திரும்ப அடித்து உதைத்ததாகவும் அவர்கள் கூறினர். பிரபாகரை, ஒரு மின்விசிறியில் கயிற்றைக் கட்டி அதில் தொங்க விட்டார்களாம். அந்தக் கயிற்றைக் கொண்டு அவரைக் கொல்லப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

தம்மை வெளியில் விட்டபோது நடந்த சித்திரவதை பற்றி எங்கும் வாய் திறக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும் பிரபாகர் தெரிவித்தார்.

“..உடல் வெந்து போனது பற்றி யாரும் கேட்டால், சூடான சூப் மீ-யை ஊற்றிக்கொண்டதாக சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது”, என அந்த 30-வயது லாரி ஓட்டுனர் கூறினார்.

சம்பவம் நடந்த நாளிலிருந்து தாம் பயந்து போயிருப்பதாகவும் மனநோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற வேண்டியதாயிற்று என்றும் பிரபாகர் கூறினார்.

‘நீதித்துறையும் காரணம்’

அவ்விருவர் சார்பிலும் முன்னிலையாகும் வழக்குரைஞர் என்.சுரேந்திரன், போலீஸ் கொடுமையால் பொதுமக்களுக்கு எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றார்.

இதற்கு போலீஸும், அதை எப்போதுமே தற்காத்துப் பேசும் உள்துறை அமைச்சும் மட்டும் காரணம் அல்ல, நீதித்துறையும்தான் காரணம் என்றவர் வலியுறுத்தினார்.

“போலீஸ்காரர்கள் பிழையற்றவர்கள், கடுமையான உழைப்பாளிகள், இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பது நீதிபதிகளின் நினைப்பாக இருக்கிறது.

“இதனால் அவர்கள் இயல்பாகவே போலீஸ் சொல்வதை நம்புகிறார்களே தவிர புகார்தாரர்களை நம்புவதில்லை. நம் நீதிபதிகள், போலீஸ் காவலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புவதே இல்லை”.

நீதித்துறை போலீசுக்கு ஆதரவாக எப்போதும் செயல்படுகிறது என்பதால் தம் கட்சிக்காரர்களின் வழக்கை நடத்துவது சிரமமாகவே இருக்கும் என்று பிகேஆர் உதவித் தலைவருமான சுரேந்திரன் கூறினார்.

என்றாலும் அவ்வழக்கை நடத்துவது அவசியம் என்றே அவர் கருதுகிறார்.போலீஸ் கைதிகளைத் துன்புறுத்தினால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை நினைவுறுத்த இப்படிப்பட்ட வழக்குகள் தேவைதான் என்றாரவர்.

பிரபாகர், சாலமன் இருவரும் கூட்டாக தொடுத்துள்ள வழக்கில், தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்புக்காகவும் வேறு பல பாதிப்புகளுக்காகவும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 12-இல்  கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், இன்னொரு வழக்கில்,போலீஸ் சார்ஜண்டுகள் இருவர்- முகம்மட் ஷாபி அப்துல் ஹாலிம், முகம்மட் டியா சுலைமான் ஆகியோர் -பிரபாகரனுக்கும் சாலமனுக்கும் காயங்கள் ஏற்படுத்தியதன் தொடர்பில் எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டதை அடுத்து பிரபாகரனும் சாலமனும் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

முகம்மட் ஷாபியும் முகம்மட் டியாவும், பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் 2008 டிசம்பர் 23 இரவு மணி 10.15-இலிருந்து 2008 டிசம்பர் 24 அதிகாலை மணி 3.30வரை பிரபாகரனை உடல்ரீதியில் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக பெர்னாமா அறிவித்திருந்தது.

அவ்விருவரும் இதர ஐந்து போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து அதே இடத்தில் அதே நேரத்தில் சாலமனையும் துன்புறுத்தினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த ஐவரும் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்படவில்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர்.

பிரபாகரனும் சாலமனும் கூட்டாக தொடுத்துள்ள வழக்கில் அந்த எழுவரும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட்டும் அரசாங்கமும் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

TAGS: