நஜிப் வருகை பிஎன் கட்சித்தாவலைத் தடுக்காது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வார இறுதியில் சாபாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் வருகை, பாரிசான் நேசனலைச் சேர்ந்த ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகுவதையோ,  விலகி பக்காத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதையோ தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படவில்லை.

அம்மனிதர் தம் முடிவில் உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்த சாபா பிகேஆர் தலைவர் தம்ரின் ஜைனி(இடம்), பொதுவாகவே சாபா மக்கள் பிஎன்மீது வெறுப்புக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

“அரச விசாரணை ஆணையம் பற்றி விளக்குவதற்காக வருகிறார் என்று கருதப்படும் நஜிப்பால் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.சாபா மக்கள் நீண்ட காலம் காத்திருந்தார்கள்.ஆனால், இப்போதுதான் ஆணையம் பற்றி அறிவிக்க வருகிறார்கள்.

“அடிநிலை சாபா மக்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.சாபாவை  வைப்புத்தொகையாக பிஎன் இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாது.சாபா மற்ற பக்கத்தான் ரக்யாட் மாநிலங்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பிஎன்னின் ஆதிக்கத்தைக் கெடுத்து மத்திய அரசைக் கைப்பற்றத் திட்டமிடுகிறது,

“பிஎன் ஆதிக்கத்தில் ஒரு வடுவை ஏற்படுத்த சாபா விரும்புகிறது.முன்பு சாபா, மாற்றரசுக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அதைச் செய்திருக்கிறோம்”, என்று மலேசியாகினியிடம் தம்ரின் தெரிவித்தார்.ஜோசப் பைரின் கிட்டிங்கானின் பிபிஎஸ் கட்சி சாபாவை ஆண்ட காலத்தை நினைவில் வைத்துக்கொண்டுதான் அவர் அவ்வாறு  கூறினார்.பின்னர் பிபிஎஸ் ஆளும் கட்சியில் சேர்ந்துகொண்டது.

முன்னாள் வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சர் லாஜிம் உகின், மத்திய அரசிலும் அம்னோவிலும் தாம் வகித்த பதவிகளைவிட்டு விலகியிருப்பதே பிஎன்னில் ஏதோ ஒன்று சரியில்லை என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.

லாஜிம் ஜூலை 28-இல் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

அவரைப்போல் துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்-கும் உப்கோ கட்சியிலிருந்து விலகி இருக்கிறார்.

மாற்றம் தேவை என்ற மனநிலை

அவர்களப் பின்பற்றி மேலும் பலர் விலகுவார்களா என்ற வினவலுக்கு ஒருவர் விலகுவது உறுதி என்று அஹ்மட் தம்ரின் கூறினார்.

“அவர் பிஎன் உறுப்புக்கட்சி ஒன்றின் உறுப்பினர்.ஆனால், அம்னோவைச் சேர்ந்தவர் அல்ல”, என்றார்.

“அவர் வெளியேறுவது உறுதி.மற்றவர்களும் விலகுவார்களா என்பதை இப்போதைக்குச் சொல்ல இயலாது”.

அஹ்மட் தம்ரின் சொன்னதையே பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டரும் எதிரொலித்தார்.

“சாபாவில் நீண்ட காலம் தங்கி இருந்தேன்.அப்போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் கண்டேன்.இந்த அலையை எதிர்த்து பிஎன் மேலும் தாக்குப்பிடிக்க முடியாது”.

பியுஃபோர்ட் மற்றும் பாப்பாருக்கு அருகில் உள்ள கிமானிசுக்கு நஜிப் வருகை மேற்கொள்கிறார், என்றாலும் அவரது வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் அலைகளைத் தடுத்து நிறுத்தப்போவதில்லை என்று ஷம்சுல் இஸ்கண்டர் கூறினார்.

“சாபாவில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் தலைவர் சார்ந்ததல்ல.மாற்றத்துக்காக ஏங்கும் அடிநிலை மக்களிடமிருந்து அது புறப்பட்டுள்ளது”. 

 

TAGS: