சாபாவில் நீண்ட காலமாக இருந்துவரும் சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ)அமைப்பதால் “நன்மை ஏதுமில்லை” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் அவரிடம் அது பற்றி வினவியதற்கு, ஆர்சி அமைப்பது வீணான முயற்சி என்றும் விசாரணை முடிவு எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படப்போவது அரசாங்கம்தான் என்றும் அவர் சொன்னார்.
“விசாரணை முடிவு அரசுக்கு சாதகமாக இருந்தால் தில்லுமுல்லு நடந்துவிட்டதாக மாற்றரசுக் கட்சிகள் கூறும். எதிராக இருந்துவிட்டால் அரசின் கழுத்துக்குத்தான் ஆபத்து”, என்றாரவர்.
சாபாவில் அரசியல் நோக்கில் குடியுரிமை வழங்கப்பட்டதில் மகாதிருக்கும் பங்குண்டு என நீண்ட காலமாகவே குற்றம்சாட்டப்பட்டு வந்துள்ளது.அதற்கு மகாதிர், சட்டவிரோத குடியேறிகளில் பலர், நீண்ட காலம் சாபாவில் தங்கியிருப்பதால் மலேசியக் குடியுரிமை பெறத் தகுதி பெற்றவர்களே என்று பதிலளித்தார்.
“நான் குடியேறிகளை அழைத்து வந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.நான் அழைத்து வரவேண்டும் என்பதில்லை.அவர்கள் தாங்களாகவே வந்தவர்கள்…..
“அவர்களைத் திருப்பி அனுப்பும் முயற்சி எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்.முன்பு ஒரு தடவை அப்படிச் செய்தோம்.சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்துவிட்டார்கள்’, என்றாரவர்.
தம் வலைப்பதிவில் சாபாவில் மக்கள்தொகை பெருகியிருப்பதை நியாயப்படுத்தி இடுகை இட்டுள்ள மகாதிர், வரலாற்று ரீதியில் பார்த்தால் தென் பிலிப்பீன்ஸுக்கும் முன்பு பிரிட்டிஷ் வட போர்னியோவாக இருந்த பகுதிக்குமிடையிலான எல்லை அவ்வளவாக மதிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் அங்கு போவதும் வருவதுமாக இருந்துள்ளனர்.சாபாவில் நிலைமை நன்றாக இருந்ததால் அங்கேயே நீண்ட காலம் தங்கி விட்டார்கள்.ஆகவே, அவர்கள் வெளிநாட்டவர் அல்லர்”, என்றார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாளை சாபா செல்கிறார்.அங்கு அவர் சட்டவிரோத குடியேறிகள் மீதான ஆர்சியின் பணிகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பக்காத்தான் ரக்யாட் மாநிலங்கள் சொந்தமாக உருவாக்கிக்கொண்ட கருப்பொருளில் தேசிய நாளைக் கொண்டாடுவது பற்றிக் கருத்துரைத்த மகாதிர், அது மாற்றரசுக் கட்சி ஆட்சி செய்வதற்கு இன்னும் தயாராகவில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என்றார்.
“என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை…..மாற்றரசுக் கட்சியில் இது சகஜம்தான்”, என்று கேலி செய்தார்.