பெர்சே வழக்கு: தலையிடுவதற்கு கவிஞர் பாக் சாமாட் முயலுவதை அரசாங்கம் எதிர்க்கும்

பெர்சே 2.0 வழிகாட்டல் குழுவின் 9 உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தலையிடுவதற்கு அதன் இணைத் தலைவர் ஏ சாமாச் சைட்-டும் இதர ஐந்து குழு உறுப்பினர்களும் சமர்பித்துள்ள விண்ணப்பத்துக்கு அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கும்.

அந்த விண்ணப்பம் தொடர்பாக அரசாங்கமும் ஆறு விண்ணப்பதாரர்கலும் செப்டம்பர் 18ம் தேதி வாய்மொழியாக தங்கள் வாதத் தொகுப்பைச் சமர்பிக்க வேண்டும் எனக் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் லூயிஸ் ஒ ஹாரா இன்று முடிவு செய்தார்.

பெர்சே குழுவைச் சேர்ந்த இயோ யாங் போ, ஹிஷாமுடின் முகமட் ராயிஸ், அகமட் சுக்ரி சே ரசாப், சுப்ரமணியம் பிள்ளை, பியாவ் கோக் பா ஆகியோரே மற்ற ஐந்து விண்ணப்பதாரர்கள் ஆவர்.

பெர்சே 3.0 பேரணியின் போது ஏற்பட்ட சேதங்களுக்காக 122,000 ரிங்கிட் கோரி  பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது 9 இதர குழு உறுப்பினர்கள் மீதும் மே 15ம் தேதி கூட்டரசு அரசாங்கம் சிவில் வழக்குத் தொடர்ந்தது.

தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பேரணிக்கான ஏற்பாட்டில் தாங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த வழக்கில் தாங்களும் தலையிட வேண்டும் எனக் குறிப்பிட்டு கடந்த மாதம் பெர்சே வழிகாட்டல் குழுவின் ஆறு உறுப்பினர்களும் விண்ணப்பித்துக் கொண்டனர்.

“விண்ணப்பதாரர்கள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை”

சாமாட், சுப்ரமணியம், லியாவ் சார்பில் ஷீலா லிங்கமும் இயோ, அகமட் சுக்ரி, ஹிஷாமுடின் ஆகியோருக்காக லிம் துக் சுன் -னும் ஆஜரானார்கள்.

உயர் நீதிமன்ற விதிகளில் 15(6) வது விதியின் கீழ் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யாததால் வழக்கில் தலையிடுவதற்கு தகுதி பெறவில்லை என வழக்கு நிர்வாகத்தின் போது முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் அஜிஸான் முகமட் அர்ஷாட் நீதிமன்றத்தில் கூறினார்.

அந்த விதியின் கீழ் எந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது ஒரு சட்டப்பூர்வ நலனை மட்டுமே பாதிக்கும். ஆனால் இந்த வழக்கில் அதனை பயன்படுத்த முடியாது என அஜிஸான் பின்னர் நிருபர்களிடம் விளக்கினார்.

ஆகஸ்ட் 28ம் தேதிக்கு முன்னதாக தங்களது வாதத் தொகுப்புக்களை பரிவர்த்தனை செய்து கொள்ளுமாறும் செப்டம்பர் 18ம் தேதி அவை தங்கள் வாதங்களை வாய்மொழியாகச் சமர்பித்த பின்னர் தமது முடிவை அறிவிப்பதாகவும் நீதிபதி ஒ ஹாரா சொன்னார்.

இதனிடையே வலைப்பதிவாளரும் போராளியுமான ஹாரிஸ் இப்ராஹிம் என அறியப்படும் ஹாரிஸ் பாத்தில்லா தமக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட வழக்கை நீக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.

தமது கட்சிக்காரருக்கு எதிராக தொடுத்த வழக்கை தொடரப் போவதில்லை என இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நோட்டீஸ் ஒன்றை சமர்பித்துள்ளதாக அவருடைய வழக்குரைஞர் ஆர் தீபஜோதி நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.