தண்ணீர் நிறுவனங்கள்- புத்ராஜெயா ஒப்புதல் மட்டுமே எஞ்சியுள்ள முட்டுக்கட்டை

சிலாங்கூர் மாநிலத்தில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்க ஒப்புதல் மட்டுமே எஞ்சியுள்ள முட்டுக்கட்டை என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறியிருக்கிறார்.

Syabas, Splash, Korsortium Abass அந்த நீர்வளச் சலுகை நிறுவனங்களை எடுத்துக் கொள்வது தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் 2010ம் ஆண்டு தொடக்கம் யோசனைகளை முன்மொழிந்து வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அந்த யோசனைகளை கூட்டரசு அரசாங்கம் நிராகாரித்து வந்துள்ளது.

“ஆகவே கூட்டரசு அரசாங்கம் இந்த விஷயத்தில் நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். அது முழு ஆதரவைக் குறிப்பாக நீர்வளச் சலுகை நிறுவனங்களை எடுத்துக் கொள்வதற்கான நியாயமான விலைகள் மீது முடிவு செய்ய அனைத்துலக பஞ்சாயத்துக் குழுவை ஏற்பாடு செய்ய காலித் முன் வந்துள்ளதை கூட்டரசு அரசாங்கம் ஏற்க வேண்டும்,” என இன்று விடுத்த ஒர் அறிக்கையில் புவா சொன்னார்.

சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொள்ளும் தண்ணீர் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கூட்டரசு அரசாங்கம் தலையிடாது என தண்ணீர் மீதான அமைச்சரவைக் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள துணைப் பிரதமர் முஹைடின் யாசின் விடுத்த அறிக்கை பற்றி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா கருத்துரைத்தார்.

அந்த அறிக்கையை ஆதரித்த புவா, “அந்த மறுசீரமைப்பு பரிவர்த்தனை விருப்பம் உள்ள விற்பனையாளர்- விருப்பமுள்ள வாங்குகின்றவர் என்னும் அடிப்படையில் இருக்க வேண்டும்” என சொல்லியிருப்பதின் மூலம் சலுகை ஒப்பந்தங்களில் அந்த அமைச்சரவைக் குழு தலையிட்டுள்ளது என்றார்.

“சிலாங்கூரில் நீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட முன் கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட வழிமுறையில் அந்தச் சலுகைகளை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு வகை செய்யும் விதிகள் அடங்கியுள்ளன,” என்றும் புவா குறிப்பிட்டார்.

 

 

TAGS: